தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் நாளை முதல் கனமழை தொடங்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், 7ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, 8ம் தேதி வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையாமல், தொடர்ந்து அதே பகுதியில் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய மேலும் 24 மணி நேரம் எடுத்து கொள்ளும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன்‌ தெரிவித்துள்ள தகவலில், காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றாலும், கடற்கரைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாளை மாலை அல்லது இரவு முதல் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையாக தொடங்கி, 11, 12, மற்றும் 13ம் தேதிகளில் தீவிரமடையக்கூடும் என ஹேமசந்திரன்‌ தெரிவித்துள்ளார்.

4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Night
Day