எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை நாலுமுக்கு பகுதியில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளைமறுநாள் நள்ளிரவு தீவிர புயலாக வங்க தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குவங்க கடற்கரையை கடக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, வட தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நெல்லை நாலுமுக்கு பகுதியில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.