எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் அறுவடைக்கு இருந்த நெல் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையுடன் இருக்கின்றனர்.
வங்க கடலில் நிலவும் காற்றழுத்த சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சம்பா அறுவடை பணிகள் இறுதி கட்டத்தை ஏட்டியுள்ள நிலையில், மழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிரில் ஊடுபயிராக பயிரிட்ட உளுந்து மற்றும் பச்சைப்பயிறு ஆகிய தானிய செடிகள் தொடர் மழையால் வயலில் அழுகி வீணாகும் சூழல் எழுந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நெல் மூட்டைகள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சிக்கல், புத்தூர், கீழ்வேளூர், நாகூர், வேளாங்கண்ணி, பரவை, பொய்கை நல்லூர், திருப்பூண்டி, உள்ளிட்ட இடங்களில் பரவலாக கன மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நேரடி கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் மழையால் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.