தமிழகத்தில் மக்களை தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் மக்களை தேர்தலை முன்னிட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள பறக்கும் படையினர், உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள அடுக்கம் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை - விழுப்புரம் சாலையில் வந்த பேருந்தை நிறுத்தி ஆய்வு செய்தபோது தனியார் நிறுவன ஊழியர் பிரகாஷ் என்பவர், 3 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பணத்தை விழுப்புரத்தில் உள்ள அலுலகத்திற்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது. உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துச் சென்றதால், தேர்தல் பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்து திருக்கோவிலூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர், அவ்வழியாக வந்த 4 இருசக்கர வாகனங்களை சோதனை செய்து, ஒரு லட்சத்து 31 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதேபோன்று சாத்தூர் அருகே உள்ள குகன் பாறை சாலையில் தொம்பகுளம் பகுதியை சேர்ந்த ஆட்டு வியாபாரி அருண்குமார் என்பவரின் வாகனத்தை சோதனை செய்த போது, ஆவணமின்றி எடுத்துச் சென்ற 90 ஆயிரத்து 500 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இவ்விரு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் சாத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வீரகனூர் பகுதியில் தேர்தல் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சொகுசு கார் ஒன்று நிற்காமல் வேகமாகச் சென்றது. அதனை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து சோதனை செய்தபோது, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 மூட்டை ஹான்ஸ், குட்கா  போதை பொருட்கள் பிடிப்பட்டன. கார் ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில், போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக இருவரை கைது செய்தனர்.

கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, அங்கிருந்த கட்சி நிர்வாகி சரத் விக்னேஷ் என்பவரின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சோதனை செய்த நேரத்தில் அமைச்சர் டிஆர்பி ராஜா அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day