தமிழகத்தில் வடகிழக்‍கு பருவமழை மிக தீவிரமாக உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்..!!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்​தில் வடகிழக்கு பருவ மழை மிக தீவிரமாக உள்ளதாகவும், நெல்லையில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்‍கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்று மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவி வருகிறது என்று தெரிவித்தார். இது மேலும் அடுத்து 24 மணி நேரத்தில் மேற்குத்திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும் என்றும், நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும் என்று தெரிவித்தார். 

தமிழகத்​தில் வடகிழக்கு பருவ மழை மிக தீவிரமாக உள்ளதாகவும், நெல்லையில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்த பாலச்சந்திரன், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் 
வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் சென்னைக்கு கன மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பாலச்சந்திரன், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை அக்டோபர் 1 முதல் இன்றுவரை 54 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றும், இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 40 சென்டி மீட்டர் என்றும், இப்போது பதிவாகியிருக்கிற மழையின் அளவு இயல்பைவிட 32 சதவீதம் அதிகம் என்றும் குறிப்பிட்டார். தமிழகத்தில் 168 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது என்றும், அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் ஊத்து பகுதியில் 54 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Night
Day