எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்ததால், கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்தன.
கிழக்கு திசை காற்றில் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 3ம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல், கீழ்வேளூர், நாகூர், வேளாங்கண்ணி, திருக்குவளை எட்டுக்குடி, கீழையூர் விழுந்தமாவடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டிய நிலையில் இந்த மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனிடையே, அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நேரடி கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மழையால் மூட்டைகள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம் நகர் பகுதியில் பகல் முழுவதும் வெயில் அடித்த நிலையில் இரவு நேரத்தில் கனமழை கொட்டிதீர்த்தது. இரவு நேரத்தில் பெய்த மழையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படவில்லை. வெயில் கடுமையாக காணப்பட்ட நிலையில் தற்போது குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளான மணலி, ஆலத்தம்பாடி, கச்சனம் உள்ளிட்ட பகுதிகளில் 2வது நாளாக மழை பெய்தது. தொடர் மழை காரணமாக நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையால் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கன மழையால் திருக்களாச்சேரி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். கொள்முதலின்போது ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், நிரந்தர கட்டடம் கட்டித்தர வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ம் நிலக்கோட்டை , வத்தலக்குண்டு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் பெய்து மழையால் பொதுமக்கள் , விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பள்ளப்பட்டி, கொடைரோடு, அமையநாயக்கனூர், காமலாபுரம், பட்டி வீரன்பட்டி பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் போல் ஓடியதால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
நெல்லை நாங்குநேரி சுற்றுவட்டாரத்தில் மாலையில் காற்றுடன் பரவலாக மழை பெய்தது. மதியம் வரை, வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நெல் நடவு செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சாலைகளில் ஆறாய் ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.