தமிழகத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட 75வது குடியரசு தினவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

75வது குடியரசு தினவிழா தமிழகத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர்கள் தேசியக்கொடி ஏற்றிவைத்து, காவல்துறையினரின் மிடுக்கான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். 

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதோடு,  வண்ண பலூன்களையும், வெண்புறாக்களையும் வானில் பறக்கவிட்டார். தொடர்ந்து மாநகர மற்றும் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 104 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். பின்னர் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் பங்கேற்று, தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து 83 பயனாளிகளுக்கு 29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கும் வருவாய்த் துறையினருக்கும் சான்றிதழ்களை வழங்கினார். 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் குடியரசு தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தி, காவல்துறையினரின் அணுவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர்  சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். 

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சலில் உள்ள ஆயுதப்படை  மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறையினரின் சிறப்பான அணிவகுப்பை ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கமேண்டோ படையினரின் வீரதீர சாகச நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது.

நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பின், 32 பயனாளிகளுக்கு 40 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றபின், 1 கோடியே 38 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் நடைபெற்ற பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். 

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஆட்சியர் கோ லட்சுமிபதி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றபின், 1 கோடியே 65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதையடுத்து தூத்துக்குடி மழை வெள்ளத்தின்போது சிறப்பாக பணிபுரிந்த 79 காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தனர். 

தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழாவில், ஆட்சியர் தீபக் ஜேக்கப் பங்கேற்று, தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றபின், 3 புள்ளி 7 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியர் சங்கீதா தேசியக்கொடி ஏற்றினார். காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றபின், 2 புள்ளி 76 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து 77 காவலர்களுக்கு தமிழக அரசின் பதக்கங்களையும், 50க்கும் மேற்பட்டோருக்கு சிறந்த பணிகளுக்கான விருதுகளையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வஉசி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், தேசியக்கொடி ஏற்றி, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இதில் வெள்ளத்தின் போது சிறப்பாக பணியாற்றிய 510 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில், ஆட்சியர் ஸ்ரீதர் தேசியக்கொடி ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறை மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் ஆட்சியர் கலைச்செல்வி தேசியக்கொடி ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். தொடர்ந்து 23 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் தேசியக்கொடி ஏற்றி வைத்த ஆட்சியர் கார்த்திகேயன், காவல்துறையினரின் மிடுக்கான அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். இதில் தலைமை காவலர்கள் 51 பேருக்கு முதல்வரின் பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியர் பிரபு சங்கர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் மூவர்ண பலூன்களையும் காற்றில் பறக்கவிட்டு, சமாதானத்தை வலியுறுத்தும் வெண் புறாக்களை வானில் பறக்கவிட்டார். தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் கௌரவித்தார். 

கள்ளக்குறிச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆட்சியர் ஷர்வன்குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுக்கும் காவலர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கினார்.

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியர் கார்மேகம் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டார். தொடர்ந்து சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தாரை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. 

கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியர் தங்கவேல் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, 41 பயனாளிகளுக்கு 47 லட்சத்து 40 ஆயிரத்து 378 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

ஆட்சியர் மெர்சி ரம்யா தேசியக் கொடியை ஏற்றி வைத்து,  காவல்துறையினர் அணிவிப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பின், காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 47 பேருக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது. 

தென்காசி நகர பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஆட்சியர் ரவிச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சிறந்து பணியாற்றிய 242 அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியர் உமா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அரசுத் துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

குடியரசு தின விழாவை ஒட்டி நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அப்போது, கோவிலில் உள்ள காந்திமதி யானை, தனது தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தி சத்தம் எழுப்பிய காட்சி, பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. 

Night
Day