எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் இன்று தொடங்கிய 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.
2024-25ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் அடுத்த மாதம் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வினை 12 ஆயிரத்து 487 பள்ளிகளைச் சார்ந்த 4 லட்சத்து 46 ஆயிரத்து 471 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 499 மாணவிகளும், தனித்தேர்வர்கள் 25 ஆயிரத்து 841 பேரும், சிறைவாசித் தேர்வர்கள் 273 பேர் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 084 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
தேர்வுப் பணியில் சுமார் 48 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வுப் பணியில் ஈடுபடுட்டுள்ளனர்.
தேர்வு மையங்களில் மாணவர்களுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் 158 தேர்வு மையங்களில் 518 பள்ளிகளை சேர்ந்த 39ஆயிரத்து434 மாணவ-மாணவிகள் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் 220 பறக்கும் படையினர் மாணவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக 173 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 449 பள்ளிகளைச் சேர்ந்த 17 ஆயிரத்து 523 மாணவர்களும், 16 ஆயிரத்து 956 மாணவிகளும் என 34 ஆயிரத்து 479 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். பொதுத்தேர்வு பணியில் முதன்மை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை என சுமார் 2000க்கும் மேற்பட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 95 மையங்களில் 22 ஆயிரத்து 929 பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் 718 தனித்தேர்வர்கள் என மொத்தம் 23 ஆயிரத்து 647 பேர் தேர்வு எழுதுகின்றனர். பொதுத்தேர்வு பணிக்கு 95 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், ஆயிரத்து 507 அறை கண்காணிப்பாளர்கள் என மொத்தம் ஆயிரத்து 703 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் 183 தேர்வு மையங்களில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 41ஆயிரத்து398 மாணவ-மாணவிகள் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், கல்வித்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 353 பள்ளிகளை சேர்ந்த, 24 ஆயிரத்து 854 மாணவ, மாணவிகள் 117 மையங்களில் தேர்வெழுதுகின்றனர். தேர்வு மையங்களை கண்காணிக்க 170 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் தேர்வுகளை எழுதுகின்றனர்.
புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 20 தேர்வு மையங்களில் 146 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 278 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதேபோல், காரைக்காலில் 28 பள்ளிகளை சேர்ந்த 497 மாணவ, மாணவிகள், 284 தனித்தேர்வர்கள் என 781 பேர் தேர்வு எழுதுகின்றனர்.