தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி உட்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தென்காசி, தேனி, திண்டுக்கலில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, நீலகிரி உட்பட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 21ம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகள், தெற்கு கேரள கடலோர பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால், குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. 

Night
Day