எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என, அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது மேலும் அண்டை மாநிலமான கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து காலி மனைகளையும் சுத்தப்படுத்தவும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புடன் ஒருங்கிணைந்து இனப்பெருக்க ஆதாரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அலுவலகங்களின் வளாகங்களில் ஏடிஸ் கொசு இல்லாததாக மாற்றப்படுவதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 42 நாட்களில் 720 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக ஜூலை 12ஆம் தேதி வரை 5 ஆயிரத்து 554 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.