தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட "மாட்டுப் பொங்கல் விழா"

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உழவுக்கு உயிரூட்டும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல் விழா, தமிழகம் முழுவதும் நேற்று  கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து, உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளை போற்றும் வகையில், மாட்டுப்பொங்கல் விழா, ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாம் நாள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நன்னாளில் விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி, பொங்கல் வைத்து படையலிடுவர். பின்னர், கால்நடைகளுக்கு பொங்கல், கரும்பு உள்ளிட்டவற்றை உணவாக வழங்கி மாட்டுப் பொங்கலை கொண்டாடுவர். 

அதன்படி,  பெரம்பலூர் மாவட்டத்தில்  கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் மாட்டுப்பொங்கல் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன்படி மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை குளிப்பாட்டி வண்ண வண்ண பொட்டுகள் இட்டு மூக்கணாங்கயிறு மாற்றினர். பின்னர் பட்டிகளில் பொங்கல் வைத்து அவற்றை மாடுகளுக்கு ஊட்டி பொங்கலோ பொங்கல் சத்தமிட்டு  கொண்டாடி மகிழ்ந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே மணிகண்டி கிராம மக்கள் ஒன்று கூடி, தங்களது கால்நடைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி கொண்டு வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். அதே போல சினேகவல்லிபுரத்தில் ஒரே இடத்தில் பொங்கல் வைத்து வழிபட்டு கால்நடைகளுக்கு பொங்கலை உணவாக அளித்து மகிழ்ந்தனர்.

புதுக்கோட்டை அருகே சூளைப்பட்டி கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஊரின் எல்லையில் உள்ள அய்யனார் கோவிலில் ஒரே வரிசையாக பொங்கல் பானை வைத்து பொங்கலிட்டனர். பின்னர் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் 20க்கும் மேற்பட்ட பசு மாடு மற்றும் காளை மாடுகளை குளிப்பாட்டி சந்தனம் குங்குமம் பூ உள்ளிட்டவை வைத்து அதை அலங்காரம் செய்து வழிபட்டனர்.

தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல் முன்னிட்டு வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள கோ சாலாவில் வாழைமரம் தோரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள மாடுகளை குளிப்பாட்டி மாட்டின் கொம்புகளுக்கு வண்ணங்கள் பூசி சிறப்பு பூஜைகள் செய்து வணங்கினர்.

தருமபுரி மாவட்டம், அன்னசாகரம் கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு மஞ்சள்  குங்குமம் வைத்து அலங்கரித்து ஊர் மையப் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு முன்பாக நிறுத்தி சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து கால்நடைகளை சுற்றி பொங்கலோ பொங்கல் பொலியோ பொலி எனக்கூறி மூன்று முறை சுற்றி கோவில் புனித நீர் தெளித்தனர்.  



Night
Day