எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விருதுநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், தமிழக மக்கள் நல கட்சியின் பட்டியல் மற்றும் பழங்குடியினர் இன மாநில பிரிவு செயலாளர் வழக்கறிஞர் முத்துக்கண்ணு என்பவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான முனைவர் ஜெயசீலனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் கடந்த 2 நாட்களாக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில். முதியவர் ஒருவர் முதன் முதலில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதுர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான முதியவர் அரசன் என்பவர், 4வது முறையாக, சுயேட்சை வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்து, தனது வேட்பு மனுவை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி பழனியிடம் தாக்கல் செய்தார்.
மதுரை பென்னாகரம் பகுதியில் அச்சகம் நடத்தி வரும் 63 வயது முதியவர் மகேஸ்வரன் என்பவர், மதுரை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட, தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை அளித்தார்.
மதுரை தல்லாகுளத்தில் உள்ள கிடங்கில் இருந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. 10 சட்டமன்ற தொகுதிகளில் 2 ஆயிரத்து752 வாக்கு சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.