தமிழகம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி தீவிரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளுக்கு அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

பெரம்பலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நடைபெற்றது. கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் கருவிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.கற்பகம் தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் அலுவலர் கிறிஸ்துராஜ் தலைமையில் அனைத்து  அரசியல் கட்சியினர் முன்னிலையில் கணினி மூலம் சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. இந்த மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிவாரியாக அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்து அனுப்பி வைக்கப்பட்டன. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான விஷ்ணு சந்திரன் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், ஓட்டு போடுவதை உறுதி செய்யும் விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.

நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் கா.ப.கார்த்திகேயன் பார்வையிட்டார். முதற்கட்ட இணையவழி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் கருவிகளை அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன. 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து அரசியல் கட்சியினர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், போலீசார் முன்னிலையில் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான 275 வாக்குசாவடி மையங்களுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பாதுகாப்பு அறையில் தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழ்மணி மேற்பார்வையில் காவல்துறை பாதுகாப்புடன் வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன.

Night
Day