எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக அமைதி மற்றும் மழை வேண்டியும், பாலஸ்தீனம் மீதான தாக்குதலை நிறுத்தி, அமைதி நிலவவேண்டும் என இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தினை முன்னிட்டு 30 நாட்கள் நோன்பிருந்த இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே எழுந்து குளித்து, புத்தாடைகள் அணிந்து, தொழுகையில் ஈடுபட்டு ரம்ஜான் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமிய பெருமக்கள் காலையில் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
கோவை உக்கடம் கரும்பு கடை பகுதியில் இஸ்லாமிய பள்ளி மைதானத்தில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை மேற்கொண்டனர். தொழுகை முடிந்த பின்னர் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இந்த மாபெரும் சிறப்புத் தொழுகையின் பிரம்மாண்ட ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் ஒன்றிணைந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது, நிலநடுக்கம் ஏற்பட்ட மியான்மர் மற்றும் தாய்லாந்து பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மீண்டும் நலம் பெறவும், பாலஸ்தீனத்தில் நடைபெற்று வரும் போர் முடிவுற்று அமைதி நிலவ வேண்டியும், உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
திருவாரூரில் உள்ள விஜயபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி திடலில், விஜயபுரம் ஜமாத் சார்பில் 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அப்போது இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகை களைகட்டியது. அதன்படி, புதுச்சேரி கடற்கரை காந்திசிலை எதிரே தவ்ஹித் ஜமாஅத் சார்பில் 500-க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு, ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்து கொண்டனர். தொழுகை நடைபெறும் பள்ளிவாசல்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மாநகராட்சி திடலில் சுமார் 10 ஆயிரம் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். உலக அமைதி மற்றும், மழை வேண்டியும், தாய்லாந்து, மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதித்த மக்கள் மீண்டு வரவும் வேண்டி பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
ராமநாதபுரம் சந்தை திடலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் புத்தாடை அணிந்து ஏராளமான இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்டோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்த பின்னர் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.