எழுத்தின் அளவு: அ+ அ- அ
டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. போராட்டதை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் வகையில் டெல்லி முழுவதும் இன்று விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட விவசாயிகள் நீடாமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, திண்டுக்கல் செல்லும் பயணிகள் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையத்தில், ரயில் மறியல் போராட்டாத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். 2 விவசாயிகள் திடீரென தண்டாவளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.