எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருச்சியில் கொட்டித் தீர்த்த கனமழையால் திருச்சி விமான நிலையம் வெள்ளத்தில் மிதக்கிறது.
தமிழகம் முழுவதும் கோடை மழை பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் சாலைகளில், சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் திருச்சியில் 115 மில்லிமீட்டர் மழை கொட்டிதீர்த்துள்ளது. குறிப்பாக திருச்சி விமான நிலைய பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு 12.94 சென்டிமீட்டர் மழை பெய்ததால் விமான ஓடுதள பாதைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் பெய்த கன மழை காரணமாக கோவை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. குறிப்பாக சாலைகள், ரயில்வே சுரங்க பாதைகளிலும் மழை நீர் அதிகமாக தேங்கி உள்ளதால் வாகன ஓட்டி கள் பாதிக்கப்பட்டனர்.
திருச்சியில் கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீல் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. ஹீபர் ரோட்டில் உள்ள நீதிமன்ற காவல் நிலையம் உள்ளே மழை நீர் புகுந்ததால் நாற்காலிகள், மேஜைகள் முக்கிய ஆவணங்கள் இருந்த அறைகளில் தண்ணீர் தேங்கியதால் காவலர்கள் பாதிக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கோடை மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனஓட்டிகள் அவதியடைந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்ததால் நீர்நிலைகளில் தண்ணீர் அளவு உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், லால்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் மழைநீர் வடியாமல் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டதே தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருச்சி லால்குடி அருகே கனமழையால் மரம் விழுந்து இருவர் காயமடைந்தனர். கொப்பாவளி கிராமத்தை சேர்ந்த சுரேந்திரகுமார், கோகுல் என்ற இளைஞர் சாலையில் சென்றபோது அவர்கள் மீது புளியமரம் விழுந்தது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். மீட்கப்பட்ட 2 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.