தமிழக அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டு வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்க மறுத்து, அவையில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளது சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. உரை நிகழ்த்துவதற்காக எழுந்து நின்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் தேசிய கீதத்துடன் கூட்டம் தொடங்கப்பட வேண்டும் என்று பலமுறை கூறியும் தனது கோரிக்கை ஏற்கப்படவில்லை எனவும், அவையில் தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார். 

தமக்கு வழங்கப்பட்ட உரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்களுடன் முரண்படுவதாக கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த உரையை படிப்பது அரசியல் சாசனத்தை ஏளனம் செய்வது போல அமையும் என தெரிவித்தார். 

அரசு தயாரித்த உரையின் உண்மைத் தன்மை மற்றும் நெறிகளுடன் தமக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதாக வெளிப்படையாகவே கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வாழ்க தமிழ்நாடு வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் மற்றும் ஜெய் பாரத் எனக்கூறி, 2 நிமிடங்களிலேயே தனது உரையை முடித்துக் கொண்டார். 

அப்போது, அரசின் உரையை வாசிக்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டப்பேரவைக்குள்ளேயே திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் எதிர்ப்பு முழக்கங்களையும் எழுப்பினர். அரசின் உரையை வாசிக்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, சபாநாயகருக்கு அருகில் தனி இருக்கையில் அமர்ந்திருந்தார். இதையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியிலேயே அவையை விட்டு வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Night
Day