தமிழக அரசின் பட்ஜெட் ஒரு அலங்கார அறிக்கை : புரட்சித்தாய் சின்னம்மா விமர்சனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக அரசின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, யாருக்கும் பயனளிக்காத ஒரு விளம்பர அறிக்கையாக இருப்பதாக, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, சாமானிய மக்களை நம்ப வைத்து ஏமாற்றக்கூடிய வெற்று அறிவிப்புகள் அடங்கிய ஒரு அலங்கார நிதிநிலை அறிக்கையாகத் தான் இதனைப் பார்க்க முடிகிறது என்றும் திமுக ஆட்சிக்கு வந்தது முதல், தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையானது, சாமானிய மக்களுக்கு பெரிதும் பயனளிக்காத வெற்று அறிவிப்புகள் அடங்கிய ஒரு அலங்கார அறிக்கையாகத்தான் பார்க்கமுடிகிறது என தெரிவித்துள்ளார். 

தமிழக மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் எந்தவித உருப்படியான திட்டங்களும் இடம்பெறவில்லை - திமுக ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது - இன்றைக்கு நான்காவது முறையாக நிதிநிலை அறிக்கையும் தாக்கலாகிவிட்டது - திமுக தலைமையிலான அரசால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பலனும் இதுவரை கிடைக்கவில்லை - திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர் என புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் சொத்துவரியை உயர்த்தி, மின் கட்டணங்களை உயர்த்தி, ஆவின் பால் பொருட்களின் விலையை உயர்த்தி, பத்திர பதிவு கட்டணங்களை உயர்த்தி தமிழக மக்களின் தலையில் பெரும் சுமையை இறக்கி, தமிழக அரசு வருமானத்தை பெருக்கியும், தமிழ் நாட்டின் வளர்ச்சி தேக்க நிலையிலேயே உள்ளது - மேலும், தமிழகத்தில் பெருவாரியான மக்கள் பயனடையும் வகையில் புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் நிறுத்திவிட்டு தமிழக மக்களை ஏமாற்றியது தான் மிச்சம் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றபோது தமிழக அரசின் கடனானது 4 லட்சத்து 56 ஆயிரத்து 661 கோடி ரூபாயாக இருந்த நிலையில், மூன்றே ஆண்டுகளில் இதுவரை யாரும் செய்யாத ஒரு வரலாற்று சாதனையாக 3 லட்சத்து 76 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று, இன்றைக்கு தமிழகத்தின் கடன் சுமை 8 லட்சத்து 33 ஆயிரத்து 362 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் நிலையில், நாட்டிலேயே அதிக கடன் சுமை கொண்ட மாநிலமாக தமிழகத்தை ஆக்கியது தான் திமுக தலைமையிலான ஆட்சியின் மூன்றாண்டுகால சாதனையாக பார்க்கப்படுகிறது- இதன் மூலம் இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரின் தலையிலும் 3 லட்சத்து 77ஆயிரத்து 86 ரூபாய் கடன் சுமை இருப்பது தான் திமுக தலைமையிலான அரசின் அறிவுசார் பொருளாதாரமா? என்ற கேள்வி எழுகிறது என, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

திமுக, ஆட்சியில் அமர்வதற்கு முன் தனது தேர்தல் அறிக்கையில் 'அதை செய்வோம், இதை செய்வோம்' என்று சொல்லி, மக்களை நம்ப வைத்து ஆட்சியை பிடித்து மூன்று வருடம் முடிந்து விட்டது -  திமுகவினர் சொன்னதை ஏதாவது செய்தார்களா?- திமுகவினர் மக்களிடம் வாக்குறுதி அளித்தது போன்று நீட் தேர்வை ரத்து செய்தார்களா? - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் ஏதாவது ஒன்றையாவது நிறைவேற்றினார்களா? - புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்தார்களா? - தற்போது 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்திருப்பதன் மூலம், திமுகவினர் தேர்தல் அறிக்கையில் அரசு துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக மக்களை ஏமாற்றியது இப்போது அம்பலமாகிவிட்டது - அரசு ஊழியர்களை நம்பவைத்து அவர்களது எந்த கோரிக்கையையும் நிறைவேற்றாமல், அவர்களுக்கு நடைமுறையில் இருந்து வந்த சலுகைகளையும் பறித்துக்கொண்டதுதான் மிச்சம்-  தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட்டதா?-  தகுதியுள்ள பெண்களுக்குத்தான் உரிமைத் தொகை என்று சொல்லி மாநிலத்தில் உள்ள பாதி குடும்ப அட்டைதாரர்களை ஏமாற்றியதுதான் மிச்சம் என புரட்சித்தாய் சின்னம்மா கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக தலைமையிலான அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடுவது போன்று இந்த ஆண்டும் புதிதாக பேருந்துகள் வாங்குவதாக அறிவித்துள்ளது- இந்த வருடமாவது வாங்குமா? - அல்லது தொடர்ந்து பராமரிப்பு இல்லாத அதே பழைய பேருந்துகளை இயக்கி, தமிழக மக்களின் உயிரோடு விளையாடுமா? என்று தெரியவில்லை என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

வருடா வருடம் 12 நீர்முன்னேற்றத் திட்டங்கள் பற்றி நிதிநிலை அறிக்கையில் கூறப்படுகிறது- இந்த ஆண்டும் இவை அறிவிக்கப்பட்டுள்ளன- ஆனால் எப்போது தொடங்கும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்- வடசென்னை கட்டமைப்புக்கு இந்த ஆண்டு 1000 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது - ஆனால், கடந்த நிதிநிலை அறிக்கையில் சொன்ன 1000 கோடி ரூபாயில் முடிக்கப்பட்ட பணிகளைப் பற்றி எந்த விபரமும் இல்லை- மேலும், ஐந்தாயிரம் நீர் நிலைகளை சீரமைக்க  500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது - முதலில், இந்த அரசு, காணாமல் போன நீர்நிலைகளை கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

வறண்ட பூமியை தன்னகத்தே கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக தொழிற்சாலைகள் துவங்கி அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்த எந்தவித திட்டங்களையும் வகுக்காமல், அந்த மாவட்டத்தில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி அமைக்க போவதாக தெரிவித்து இருப்பது வேலையின்றி திண்டாடும் இப்பகுதி இளம் வயதினருக்கு பெரிதாக எந்த பயனும் அளிக்கப்போவதில்லை என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா ஏழை, எளிய, சாமானிய மக்களின் பசியாற கொண்டு வந்த அம்மா உணவக திட்டம் இன்றைக்கு அழியும் நிலையில் உள்ளது- திமுகவினர் தமிழக மக்களை மீண்டும் ஏமாற்றி இனி எந்த காலத்திலும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியாது- 2026-க்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி இருக்காது- உண்மை நிலை இவ்வாறு இருக்க, 2030ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்திருப்பதன் மூலம், இது ஒரு வடிகட்டிய பொய் என்பது தமிழக மக்களுக்கு தெளிவாக விளங்கியிருக்கும்- அதாவது, திமுகவினர் மிச்சம் உள்ள இரண்டு ஆண்டுகளில் யாருக்கும் எந்த வீடும் கட்டித்தரப்போவது இல்லை என்பது இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகள் தமிழகத்தில் அமைதி நிலவுவதாக நிதிநிலை அறிக்கையில் வாய் கூசாமல் பொய்யான கருத்துக்களை தெரிவித்து இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது - இன்றைக்கு தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லாத ஒரு அவல நிலை நிலவுகிறது- நிதிநிலை அறிக்கையில் கடைக்கோடி தமிழர் நலனை இலக்காகக்கொண்டு அரசு செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது- உண்மை என்னவென்றால் திமுக ஆட்சியில் கடைக்கோடியில் இருக்கும் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமே இன்றைக்கு கேள்விக்குறியாகிவிட்டது என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தமிழக அரசின் 2024-2025ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை யாருக்கும் பயனளிக்காத ஒரு விளம்பர அறிக்கையாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து சாமானிய மக்களை நம்பவைத்து ஏமாற்றக்கூடிய வெற்று அறிவிப்புகள் அடங்கிய ஒரு அலங்கார நிதிநிலை அறிக்கையாகத்தான் பார்க்கமுடிகிறது- எனவே, திமுகவினர் தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதை விட்டு விட்டு, எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது பயனளிக்கின்ற திட்டங்களை அளிக்க முன் வரவேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day