தமிழக அரசின் பட்ஜெட் வெற்று நிதி நிலை அறிக்கை - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக அரசின் 2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என்றும், இதில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் அனைத்தும் ஏற்கனவே அம்மா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அதே திட்டங்களுக்கு புதிய பெயர் வைத்து மீண்டும் அறிவிப்பது வேடிக்கையாக இருக்கிறது என்றும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். இன்னும் ஒருவருட காலத்தில் ஆட்சி முடிவுறும் நிலையில், இவர்கள் இன்றைக்கு அறிவிக்கின்ற திட்டங்களை எப்போது நிறைவேற்றப் போகிறார்கள் என்று தெரியவில்லை என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் 2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான ஆட்சியின் இறுதியான முழு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் அனைத்தும் ஏற்கனவே அம்மா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அதே திட்டங்களுக்கு புதிய பெயர் வைத்து மீண்டும் அறிவிப்பது வேடிக்கையாக இருக்கிறது என்றும், ஏழைகளின் காவலன் என்று விளம்பரப்படுத்திக்கொள்ளும் திமுக அரசின் நிதிநிலை அறிக்கையானது, வெற்று அறிவிப்புகளால், சாமானிய மக்களை நம்பவைத்து, மீண்டும், மீண்டும் ஏமாற்றக்கூடிய ஒரு பித்தலாட்ட அறிக்கைதானே தவிர இதில் மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வேறு எந்தவித திட்டங்களும் இடம்பெறவில்லை என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

திமுகவினர் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 505 தேர்தல் வாக்குறுதிகளை அளித்து மக்களை நம்பவைத்து ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தனர் - திமுக அரசு நான்கு வருடங்களை கழித்த நிலையில் ஒரு 10 சதவிகித வாக்குறுதிகளைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை - மேலும், இதுவரை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகளில் குறிப்பிட்டு இருந்த திட்டங்கள் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படாமல் வெற்று அறிவிப்புகளாகவே இருப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார். - திமுக ஆட்சி தனது இறுதி ஆண்டில் பயணித்து கொண்டிருக்கிறது, இன்னும் ஒருவருட காலத்தில் ஆட்சி முடிவுறும் நிலையில், இவர்கள் இன்றைக்கு அறிவிக்கின்ற திட்டங்களை எப்போது நிறைவேற்றப் போகிறார்கள் என்று தெரியவில்லை - அதிலும் குறிப்பாக, திமுக தலைமையிலான அரசு தனது ஆட்சிக்காலத்தின் இறுதியில் இருக்கும் நிலையில், மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதை காட்டிலும், அரசு ஒப்பந்ததாரர்களை மனதில் வைத்தே 2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரித்தது போன்று, எண்ணத்தோன்றுவதாக பொதுமக்கள் கருதுகின்றனர் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே இரண்டாயிரம் ஏக்கர் பரப்பில் புதிய நகரம் உருவாக்கப்படும் என இன்றைக்கு அறிவித்துள்ளது - திமுக தலைமையிலான அரசால் இப்போது இருக்கின்ற சென்னை மாநகரையே பாதுகாக்க முடியவில்லை - சென்னையில் இருந்த பேருந்து நிலையத்தையும் சென்னைக்கு வெளியே கொண்டு போய் வைத்து, இன்றைக்கு மக்கள் படாதபாடு படுகிறார்கள் - மாநகரில் நன்றாக இருந்த சாலைகள் எல்லாவற்றையும் மெட்ரோ பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் செய்வதாக சொல்லி பெரும்பாலான சாலைகள் இன்றைக்கு இரண்டாக பிரித்து வைத்து இருக்கிறார்கள் - பல பகுதிகளில் சாலைகளை மூடி வைத்து இருக்கிறார்கள். திமுகவினரின் அறிவிப்பு என்றைக்குமே காகிதத்தில் அறிவிப்பாகத்தான் இருக்கும் - அடுத்து அமையக்கூடிய அம்மா ஆட்சியில்தான் மக்களுக்கு தேவையான திட்டங்கள் அமையும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

திமுக தலைமையிலான அரசு இந்த நான்கு வருட ஆட்சியில் சொத்துவரியை உயர்த்தி, மின் கட்டணங்களை உயர்த்தி, ஆவின் பால் பொருட்களின் விலையை உயர்த்தி, பத்திர பதிவு கட்டணங்களை உயர்த்தி தமிழக மக்களை ஒவ்வொருநாளும் கசக்கி பிழிந்து வந்துள்ளது - மேலும், அரசு மினி பேருந்து சேவை, காலை உணவு திட்டம், மாநகராட்சி பணிகள் போன்ற மக்களின் சேவை சார்ந்த திட்டங்களைக் கூட தனியாருக்கு தாரை வார்த்ததுதான் மிச்சம் - மேலும், நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் மந்திரத்தை திமுகவினர் என்றைக்கு தெரிவிப்பார்கள் என்று இதுவரை தெரியவில்லை -

திமுக ஆட்சி, ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது - எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என இந்த அரசு மிகவும் மோசமான ஒரு ஆட்சியை நடத்திக்கொண்டு இருப்பதாக கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். சமீபத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைகளே சாட்சியாக உள்ளது - சுமார் 1000 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளது - ஒரு அரசு நிறுவனமே இந்த கதியில் இருந்தால், மற்ற துறைகளில் எந்த அளவுக்கு ஊழல் மலிந்து இருக்கும் என சாமானிய மக்களும் எளிதில் புரிந்துகொள்ளமுடியும் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் பெருவாரியான மக்கள் பயனடையும் வகையில் புரட்சித்தலைவி அம்மா கொண்டுவந்த அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் நிறுத்திவிட்டு, தமிழக மக்களை ஏமாற்றியதுதான் திமுக தலைமையிலான அரசின் நான்காண்டு கால சாதனை - திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றபோது தமிழக அரசின் கடனானது 4 லட்சத்து 56 ஆயிரத்து 661 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நான்கு ஆண்டுகளில் இதுவரை யாரும் செய்யாத ஒரு வரலாற்று சாதனையாக 4 லட்சத்து 73 ஆயிரத்து 298 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று, இன்றைக்கு தமிழகத்தின் மொத்த கடன் சுமை 9 லட்சத்து 29 ஆயிரத்து 959 கோடி ரூபாயாக உள்ளது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். மேலும் மிச்சமிருக்கும் காலத்தில் 10 லட்சம் கோடிக்கு அதிகமாக தமிழ்நாட்டின் கடன் சுமையை பெருக்குவதுதான் திமுக அரசின் லட்சியமாக தெரிகிறது - இதில் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் சுமையான 2 லட்சம் கோடியையும் சேர்த்தால் சுமார் 12 லட்சம் கோடிக்கு மேல் மொத்த கடன் சுமையை தமிழத்தின் தலையில் வைத்துவிட்டு திமுக வீட்டுக்கு செல்ல இருக்கிறது என்பது இப்போதே தெரிந்துவிட்டது - நாட்டிலேயே அதிக கடன் சுமை கொண்ட மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியதுதான் திமுக தலைமையிலான ஆட்சியின் சாதனையாக பார்க்கப்படுகிறது என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா விமர்சித்துள்ளார்.

2016-17 ஆம் ஆண்டின் இறுதியில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை 15 ஆயிரத்து 850 கோடி ரூபாயாக இருந்தது - ஆனால் இன்றைக்கு திமுக தலைமையிலான ஆட்சியில் 2024-2025 ஆம் நிதியாண்டின் வருவாய் பற்றாக்குறை 46 ஆயிரத்து 467 கோடி ரூபாயாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது - புரட்சித்தலைவி அம்மா அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் ஒன்றுவிடாமல் செயல்படுத்திக்கொண்டு, தனது நிர்வாக திறமையால் வருவாய் பற்றாக்குறையையும் அதிகரித்துவிடாமல் கட்டுப்படுத்தி வைத்திருந்தார் - ஆனால் இன்றைய திமுக அரசு மக்களுக்கு எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தாமல், வருவாய் பற்றாக்குறையை மூன்று மடங்காக அதிகரித்து வைத்திருப்பது திமுக தலைமையிலான அரசின் நிர்வாகத்திறமையின்மையை காட்டுகிறது என புரட்சித்தாய் சின்னம்மா சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக அரசுத்துறையில் 40 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று இப்போது அறிவிப்பு செய்யும் இந்த அரசு, கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது 50 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தது, இதில் எத்தனை நபர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டது என்று யாருக்கும் தெரியாது - தேர்தல் அறிக்கையில் எவ்வாறு 3 புள்ளி 5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பொய் வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்தபிறகு நிதிநிலை அறிக்கைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பொய்யான அறிவிப்புகளை அளித்து ஒவ்வொரு ஆண்டும் இளம் சமுதாயத்தினரை நம்ப வைத்து தொடர்ந்து ஏமாற்றிவருவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள பொருளாதார ஆய்வறிக்கையில், ஒவ்வொரு குடும்பத்தின் தலையில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 208 ரூபாய் கடன் உள்ளது என்பதை ஏன் மறைத்துவிட்டது? என்று தெரியவில்லை என புரட்சித்தாய் சின்னம்மா வினவியுள்ளார்.
 
அரசு ஊழியர்களை நம்பவைத்து அவர்களது எந்த கோரிக்கையையும் நிறைவேற்றாமல், அவர்களுக்கு நடைமுறையில் இருந்து வந்த சலுகைகளையும் பறித்துக்கொண்டதுதான் மிச்சம் - அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஈட்டிய விடுப்பு நாட்களை, சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த சலுகையை, திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பறித்துவிட்டு, தற்போது அடுத்த ஆண்டு அதாவது 01-04-2026 முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்து இருப்பதன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காதில் மீண்டும் பூ சுற்ற பார்க்கிறது - கடந்த தேர்தல் அறிக்கையில் ஓய்வூதியதாரர்களுக்கு அறிவித்த சலுகைகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. அதற்காக எந்தவித அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு அதை செய்வோம் இதை செய்வோம் என்று கட்டுக்கதைகளை அவிழ்த்து விடும் திமுக தலைமையிலான அரசு முதலில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கிடவேண்டும் - நாள்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இன்றைக்கு தமிழகத்தில் யாருமே நிம்மதியாக வாழமுடியாத அவல நிலை நிலவுகிறது என புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார்.
 
புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் மாணவர்களின் நலனுக்காக கொண்டு வந்த விலையில்லா மடிக்கணினி வாங்கும் திட்டத்தை மூடுவிழா செய்துவிட்டு, இப்போது அதை மீண்டும் ஏதோ புதிய அறிவிப்பு போன்று வெளியிடுவது வேடிக்கையாக இருக்கிறது - அம்மா ஆட்சிக்காலத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகம், பெரும்பாலான துறைகளில் முதன்மையாக சிறந்து விளங்கிய தமிழகத்தை, திமுக அரசு இன்றைக்கு சீரழித்து அதலபாதாளத்தில் தள்ளிவிட்டு, தற்போது நவீன தமிழ்நாடுக்கான திட்டங்கள் என்று வசனங்கள் பேசி கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவதால், மக்களுக்கு எந்தவித நன்மையையும் ஏற்படப்போவது இல்லை - எனவே, திமுக தலைமையிலான அரசு எஞ்சியிருக்கும் குறுகிய காலத்திலாவது, தமிழக மக்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்காமல் அவர்களை நிம்மதியாக வாழவிட வேண்டும் என தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

Night
Day