தமிழக அரசின் மின் கட்டண உயர்வுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.  மின் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டுகோள்.

திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தமிழக மக்களுக்கு திமுக தலைமையிலான அரசு செய்கின்ற மிகப்பெரிய அநீதி. இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இது மிகவும் கண்டனத்திற்குரியது.
திமுக அரசு பொறுப்பேற்றுக் கொண்டு முப்பத்தெட்டு மாதங்கள் ஆகிவிட்டது. தமிழக மக்களுக்கு திமுக அரசால் எந்தவித பயனும் இதுவரை ஏற்படவில்லை. நாள்தோறும் மேடைகளில் வசனம் எழுதி வைத்துக்கொண்டு பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழக மக்கள் ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவரும் சூழலில் தற்போது மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி ஏற்றம் கட்டுக்கடங்காமல் போய்விடும். ஏழை எளிய சாமானிய மக்கள் என அனைத்து தரப்பினரும் இதனை சமாளிக்க முடியாமல் பெரும் துன்பத்திற்கு ஆளாகப்போகின்றனர். திமுகவினர் வாக்களித்த மக்களை மேலும், மேலும் கசக்கி பிழிவது எந்தவிதத்தில் நியாயம்? என்பதை இந்த ஆட்சியாளர்கள் கொஞ்சம் சிந்தித்து பார்க்கவேண்டும்.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு உங்கள் வீடுகளில் 200 யூனிட்டுக்கு 170 ரூபாய் செலுத்திவந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு 225 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அது இன்றைக்கு மீண்டும் 480ரூபாயாக உயர்த்தப்பட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதேபோன்று 500 யூனிட் வரை பயன்படுத்துகிறவர்கள் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு  1130 ரூபாயாக மின்கட்டணம் செலுத்திவந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு 1725 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அது இன்றைக்கு 2085ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பான்மையாக 63.35 சதவிகித மக்கள் 200யூனிட்டுகள் வரை பயன்படுத்துகின்ற ஏழை எளிய சாதாரண மக்களுக்கு அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாத வகையில் மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகப்போகிறது. 

வீடுகளுக்கே இந்த நிலைமை என்றால் வர்த்தக பயன்பாட்டினர், சிறு,குறு தொழில் நிறுவனத்தினரின் நிலைமை இன்னும் மோசமாக பாதித்துவிடும். ஏற்கனவே 50 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் தங்கள் தொழிலை விட்டுவிட்டு இன்றைக்கு வீதியில் நின்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தால் அனைவருமே தங்கள் தொழிலை செய்ய முடியாமல் போய்விடும் அபாயம் உள்ளது. அதே போன்று இதர தாழ்வழுத்த மின் நுகர்வோர்களுக்கும் அதிக அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் பயன்படுத்துகிற உயர் மின்னழுத்த பயனாளிகளுக்கோ மின் கட்டணத்தோடு, நிலைக் கட்டணத்தையும் அதிகளவுக்கு உயர்த்தி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழகம் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அனைவரும் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். மின் தடங்கள்,  மின் மாற்றிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் மின் இழப்பு அதிகமாகிறது. இவற்றையெல்லாம் சரி செய்தாலே எவ்வளவோ மின்சாரத்தை நம்மால் சேமிக்க முடியும். ஆனால், திமுக தலைமையிலான அரசின் நிர்வாக சீர்கேடுகளால், திறமையின்மையால் இன்றைக்கு தமிழக மக்களின் தலையில் தாங்கமுடியாத சுமையை ஏற்றி இருப்பது எந்த விதத்தில் நியாயம்? 

எனவே, தற்போது அமல்படுத்தியுள்ள மின்கட்டண உயர்வை திமுக தலைமையிலான அரசு  உடனே திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், இந்த ஆட்சியாளர்கள் இதுபோன்ற மக்கள் விரோத போக்கை கைவிட்டுவிட்டு தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பேணிக் காக்க எதாவது ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Night
Day