தமிழக பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு வேறுயாரும் மனுத்தாக்கல் செய்யாததால், விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ள அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
பாஜக புதிய உறுப்பினர் சேர்க்கை கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, நவம்பரில் கிளை அளவில் தேர்தல் நடத்தி, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த ஜனவரியில், புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், மாநில தலைவர் பதவிக்கு,  தேர்தல் நடத்தப்பட இருந்தது. டெல்லி சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் தாமதமானது.  

இதனிடையே தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுவை மாநில தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பரிந்துரைக்க தமிழக பா.ஜ.க, தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு, எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் மட்டும் விருப்ப மனுத்தாக்கல் செய்தார்.

மாநில தலைவர் பதவிக்கு வேறு யாரும் விருப்ப மனுவை சமர்பிக்காததால், நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு, நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day