தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது - பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் மறியல் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக மீனவர்களை சிறைபிடிக்கும் இலங்கை கடற்படையை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு ராமேஸ்வரம் மீனவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. கடந்த 10ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை, நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இரண்டு விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும் எல்லை தாண்டிவந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். இந்நிலையில் இன்றும் நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படை மற்றும் நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்திய நிலையில், மீனவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

Night
Day