எழுத்தின் அளவு: அ+ அ- அ
தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீடுகள் தோறும் புத்தரிசியில் பொங்கலிட்டு, சூரிய கடவுளை வணங்கி, கரும்பை சுவைத்து பொதுமக்கள் பொங்கலை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ணகோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள், இஞ்சி செடியை கட்டி, மங்கலகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.
அந்த வகையில், நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு புதுப்பானை வைத்து பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கியதுபோது, குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என்று உற்சாக முழக்கம் எழுப்பி பொங்கலை கொண்டாடினர். இதே போன்று தற்போது திருணமான புதுப்பெண்கள், தங்கள் கணவருடன் இணைந்து தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை, துறையூர், லால்குடி, முசிறி, மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தைப்பொங்கல் வெகு வரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே பெண்கள், வாசலில் வண்ணக் கோலமிட்டு, பொங்கல் பானை வைத்து, புத்தரிசியில் பொங்கல் பொங்கி சூரிய பகவானை வழிபட்டு பொங்கலை கொண்டாடினர். இதே போன்று வெளிநாட்டில் உள்ள கணவருடன் புது மணப்பெண் ஒருவர் காணொலி மூலம் இணைந்து தனது தலைப்பொங்கலை கொண்டாடினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, துறிஞ்சிப்பட்டி கிராம மக்கள் ஒன்று சேர்ந்து விடியற்காலையில் பொன் மாரியம்மனுக்கு சூரிய பொங்கல் வைத்து வழிபட்டனர். அந்த வகையில் பொது மக்கள் அனைவரும் பொங்கல் பானையை ஊர்வலமாக கொண்டு வந்து பொன் மாரியம்மன் முன் பொங்கலிட்டனர். தொடர்ந்து மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக சென்று பொன் மாரியம்மனுக்கு தட்டு வரிசையுடன் படையிலிட்டு அம்மனை வழிபட்டனர். இதனிடையே கிராமத்தில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையும், கால் நடைகளும் நோய் நொடி இன்றி இருக்க வழிபாடு நடத்தப்படுவதாக மக்கள் தெரிவித்தனர்