எழுத்தின் அளவு: அ+ அ- அ
காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் வருவாய்துறை அலுவலர்கள் இன்றுமுதல் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். பணி பாதுகாப்பு, காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் இன்றுமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வருவாய்துறையினரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
அதன் ஒருபகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 3-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து நிலை ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து 5வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த விளம்பர திமுக அரசுக்கு எதிராக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணி பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், திருப்பத்தூர் மாவட்ட அலுவலக நுழைவாயில் முன்பு வருவாய்த்துறை ஊழியர்கள், 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் கட்டமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இளநிலை மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருத்த ஆணையினை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
பழைய ஓய்வூதியம் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அரசு ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.