எழுத்தின் அளவு: அ+ அ- அ
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மாரத்தான் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உற்சாகமாக பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கரூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் கரூர் மாவட்ட பெண் காவலர்கள் மற்றும் பெண் ஊர்க்காவல் படையினர் என சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இருந்து மாரத்தான் போட்டியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள், மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்று உற்சாகமாக ஓடினர்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் காவல்துறை சார்பில் மகளிர் உதவி எண் 181-ஐ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகர காவல்துறை சார்பில் பிரம்மாண்ட மாரத்தான் போட்டி மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு உற்சாகமடைந்தனர்.