தமிழ்நாட்டில் இன்று மாலையுடன் நிறைவடைகிறது தேர்தல் பிரச்சாரம் - அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்‍கு சேகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எல்.முருகன், கோவை மேட்டுபாளையம் பழங்குடியின கிராமங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கல்லாறு பகுதியில் பேசிய அவர், மத்திய அரசின் 5 கிலோ அரிசி திட்டத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகள் கண்டிப்பாக சிறை செல்வார்கள் என கூறினார்.


நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எல்.முருகனை ஆதரித்து வேலூர் இப்ராஹிம் வாக்கு சேகரித்தார். அப்போது குன்னூர் பெட்போர்டு பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நரசிம்மனை ஆதரித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்காக பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், உலக புகழ்பெற்ற தமிழ் கலாச்சாரம் பாதுகாக்கவும், போற்றப்படவும் பிரதமர் மோடி விரும்புவதாக கூறிய ராஜ்நாத் சிங், தேர்தல் வாக்குறுதியில் கூட தமிழ் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளதாக கூறினார்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் கே.பி. ராமலிங்கம் அத்தொகுதிக்கான 9 வாக்குறுதிகளை அறிவித்தார். இதற்காக ராசிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 400 கோடி ரூபாய் மதிப்பில் கொல்லிமலையை தேசிய சுற்றுலா மையமாக அமைக்கப்படும் எனவும் பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் எம்ஜிஆரைப் போல் தான் பார்ப்பதாக கூறினார்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் ஜான் பாண்டியனை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது தென்காசி பழைய பேருந்து நிலையம் அருகே பேசிய அவர், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தவுடன் ராமர் கோயில் கட்டியதாகவும், பொருளாதாரத்தில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் கூறினார். மேலும் ஐநா சபையில் திருக்குறளுக்கான தனி இடத்தை பிரதமர் மோடி பெற்று தந்ததாகவும், திமுக ஊழல் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்யும் கட்சி என விமர்சித்தார்.

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. பாஜக நகரத் தலைவர் வடிவேல் தலைமையில் நடைபெற்ற பேரணியில் 600க்கம் மேற்பட்டோர் வாகன பேரணியில் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நந்தினி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது  மேல்புறம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றிபெறும் எனவும், சாதனைகள் சொல்லி வாக்கு சேகரிக்காமல், எதிர்கட்சியினரை குற்றம் சொல்லி வாக்குசேகரிப்பதாக காங்கிரஸ் கட்சி வேட்பாளரை சாடினார்.

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் நாட்டாண்மை குணசேகரனா குடுகுடுப்பு காரர் வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது குடுகுடுப்பை ஒலித்தவாறு சின்னசேலம் பகுதி முழுவதும் குணசேகரனா பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். 

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மகேந்திரமங்கலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டுமென்றும், பேருந்துகளை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். 





Night
Day