வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சம் வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் இயல்பை விட 2 டிகிரி - 4 டிகிரி செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது என்றும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இயல்பை விட வெப்பம் மிக மிக அதிகமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசிய நிலையில், தமிழகத்தில் 5 இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 107.6 109.4 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.
அதிக பட்ச வெப்பநிலை ஈரோட்டில் 110.12 செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதேபோல், கரூர் பரமத்தியில் 108.5 டிகிரி ஃபாரன்ஹீட்டும், வேலூரில் 108.5 டிகிரி ஃபாரன்ஹீட்டும், திருத்தணியில் 108.5 டிகிரி ஃபாரன்ஹீட்டும், திருப்பத்தூரில் 107.6 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரையில் 106.16 டிகிரி ஃபாரன்ஹீட்டும், திருச்சியில் 105.26 டிகிரி ஃபாரன்ஹீட்டும், சேலம் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட்டும், தர்மபுரியில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட்டும், பாளையங்கோட்டையில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரை ஏர்போர்ட்டில் 104.18 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட்டும், நுங்கம்பாகக்த்தில் 100.58 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெயில் பதிவாகியுள்ளது.
இதனிடையே, தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 - 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 3 - 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது, தமிழக மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 39 - 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 - 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடுமென வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.