எழுத்தின் அளவு: அ+ அ- அ
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே நான்கு வழிச் சாலை பணிகளுடன் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வந்த நிலையில் ஒரு நாள் மழைக்கே கழிவு நீர் கால்வாய் உடைந்த அவலம் அரங்கேறியுள்ளது. தரமற்ற முறையில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருவது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடுவனூர் கிராமத்தில் நான்கு வழி சாலை பணி நடைபெற்று வரும் நிலையில் இருபுறமும் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இந்த பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் கழிவு நீர் கால்வாய் முழுமையாக உடைந்து விழுந்துள்ளது. ஒரு நாள் மழைக்கே தாக்குப் பிடிக்க முடியாத அளவிற்கு கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாயைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தரமான முறையில் கழிவு நீர்க் கால்வாய் கட்டப்படாததே இதற்கு காரணம் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த மழை நீர் வடிகால் பணியை திமுகவைச் சேர்ந்த ஒருவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வருவதாக கூறப்படுகிறது. அதனால்தான் இந்த லட்சணத்தில் பணிகள் இருப்பதாக சாடும் பொதுமக்கள், அவர் மீது மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும், மேலும் தரமான கழிவுநீர் கால்வாய் அமைக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருக்கக்கூடிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலுவின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அமைக்கும் சாலை மற்றும் கால்வாய் பணி முற்றிலும் தரம் இல்லாத வகையில் இருப்பது இதன் மூலம் அம்பலம் ஆகியுள்ளது.