தாது மணல் வழக்கு - சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக கடற்கரைகளில் சட்டவிரோதமாக தாதுமணல் எடுத்தது தொடர்பான வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லையில் சட்டவிரோதமாக தாது மணல் எடுத்ததால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக விக்டர் ராஜமாணிக்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு  பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து 2016 ஆம் ஆண்டு முதல் விசாரித்து வந்தது.

இந்த வழக்‍கில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி கடற்கரைகளில் சட்டவிரோதமாக தாதுமணல் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட பிறகும் தாதுமணல் எடுக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட அறிக்கை உறுதி செய்யப்படுகிறது என்றும், சட்டவிரோதமாக இருப்பு வைக்கப்பட்டதும், கடத்தப்பட்டதும் உறுதி செய்யப்படுகிறது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக தாது மணல் எடுத்ததால் ஏற்பட்ட 5 ஆயிரத்து 832 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பை, தனியார் தாது மணல் ஏற்றுமதியாளர்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தாதுமணல் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தாதுமணல் முறைகேடு தொடர்பாக மாநில காவல்துறையினர் பதிவு செய்த வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், சிறப்பு அதிகாரிகளை நியமித்து வழக்கை சிபிஐ கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. 

மேலும் நான்கு வாரங்களில் இந்த வழக்கின் ஆவணங்களை வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த தாதுமணல் முறைகேடு தொடர்பாக அரசியல்வாதிகளின் பங்கு இந்த விவகாரத்தில் இருப்பதை புறந்தள்ள முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Night
Day