தாமிரபரணி நம்பியாறு இணைப்பு கால்வாயில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை அருகே நண்பன் இல்ல கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்கு சென்ற 12ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் தாமிரபரணி நம்பியாறு இணைப்பு கால்வாயில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை ஜோதிபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் என்பவரது மகன் அருண்குமார், டக்கர்மார்புரத்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்பவரது மகன் நிகில், கொக்கங்கந்தான் பாறையைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் ஆண்ட்ரூஸ் ஆகிய 3 பேரும் ஜோதிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தனர்.

இவர்கள் 3 பேரும், இவர்களது நண்பரது இல்ல கிரகப்பிரவேச விழாவிற்காக முன்னீர்பள்ளம் அருகே உள்ள வடுகூர்பட்டி என்ற கிராமத்திற்குச் சென்றுள்ளனர். விழாவில் பங்கேற்ற பிறகு, நண்பர்கள் 6 பேர் இணைந்து விழா நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள தாமிரபரணி நம்பியார் கருமேனியாறு வெள்ள நீர் கால்வாயில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர்.

வெள்ள நீர் கால்வாயில் மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆண்ட்ரூஸ், அருண்குமார், நிகில் ஆகிய 3 பேரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர். இதைக் கண்ட சக மாணவர்கள் அவர்களைக் காப்பாற்றும் படி கூச்சலிட்டுள்ளனர்.  இதுகுறித்து அவர்களது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேட்டை, சேரன்மகாதேவி தீயணைப்புத்துறையினர் மற்றும் முன்னீர்பள்ளம் போலீசார், தண்ணீரில் மூழ்கிய ஆண்ட்ரூஸ் மற்றும் அருண்குமார் ஆகிய 2 பேரை சடலமாக மீட்டனர். தொடர்ந்து, சுமார் 3 மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு நிக்கிலையும் சடலமாக மீட்டனர். 

இதனையடுத்து, இறந்த 3 மாணவர்களின் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Night
Day