திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் தென்காசி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை. - சென்னை வானிலை ஆய்வு மையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், பல இடங்களில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்‍கள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்தனர். 

தூத்துக்‍குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது. அனல்காற்றை தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வந்த நிலையில், செம்பனார்கோவில், குத்தாலம், மங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்‍கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறுவை சாகுபடியில் நாற்றங்கால்கள் மற்றும் நடவு செய்த இளம் பயிர்களுக்கு ஏற்றபடி மழை பெய்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர். 

மயிலாடுதுறையில் பெய்த மழை காரணமாக நகராட்சி அலுவலகம் எதிரே மழைநீர் தேங்கியது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர். மழைநீர் தேங்கிய பகுதிக்கு அருகிலேயே குளம் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் இருந்தும் மழை நீரை வடிய வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மழை நீரை வடிய வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான வண்டாம்பாளை, மாவூர், காட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பூமியின் சூடு தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாகை மாவட்டத்தில் கோடை வெயில் அதிகரித்து காணப்பட்ட நிலையில், திருக்குவளை, கொளப்பாடு, எட்டுக்குடி உள்ளிட்ட இடங்களில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. உழவுப் பணிகளுக்‍கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.




varient
Night
Day