திமுகவில் உட்கட்சி பூசல்... பேரவை வரை எதிரொலித்த மோதல்...!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் திமுக உள்கட்சி மோதல் சட்டப்பேரவையிலும் வெடிக்கத் தொடங்கியுள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜும், பேரவைத் தலைவர் அப்பாவுவும் முட்டிக் கொண்ட சம்பவத்தால் திமுக உள்கட்சி பூசல் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. என்ன நடந்தது என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு ...

சட்டப் பேரவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியபோது, பேரவைத் தலைவர் அப்பாவு அவரைக் கண்டித்த காட்சிகள் தான் இது ...

ஆளுங் கட்சியாக இருந்துவரும் திமுக-வில் உள்கட்சி மோதல் தமிழகம் முழுவதும் கண்கூடானது. விழுப்புரத்தில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் இருவரும் பொது மேடையிலேயே மோதிக் கொண்ட சம்பவங்களும் உண்டு. அந்தந்த மாவட்டங்களில் யார் பெரியவர் என்று மோதலால் குழம்பிப் போய் உள்ளனர் திமுக தொண்டர்கள். தென்மாவட்டங்களில் யார் பெரியவர் என்ற மோதல் பேரவை தலைவர் அப்பாவுவுக்கும், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் அரசல் புரசலாக இருந்த நிலையில், அந்த அதிகார மோதல் சட்டமன்றத்திலும் வெடித்தது.

கடந்த சனிக் கிழமை சட்டப் பேரவையில் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அந்த துறையின் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார். அப்போது உரையைத் துவங்கிய அமைச்சர், முன்னுரையாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பற்றி பேசினார். பேச்சின் போது பாஜக-வை விமர்சித்த அமைச்சர், ஒரு கட்டத்தில் பாஜக பொய் பிரச்சாரம் செய்ததாக கூறினார்.
அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் அப்பாவு, பொய் என்ற சொல்லை அவையில் பயன்படுத்த வேண்டாம் என்று அமைச்சரை கடிந்து கொண்டார். உண்மைக்கு மாறாக என்ற வார்த்தையை பயன்படுத்துமாறு அறிவுறுத்திய பேரவைத் தலைவர் அப்பாவு, தேவையற்ற பேச்சை தவிர்த்துவிட்டு சப்ஜெட்டுக்கு வாங்க என்று அமைச்சரை பார்த்து கூறினார்.

சப்ஜெக்ட்டை விட்டு வேறு ஏதாவது பேசினால் அது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்றும் பேரவைத் தலைவர் அப்பாவு கூற, அதனால் முகம் மாறிய அமைச்சர், தலைவரே நாம் அரசியல் கட்சி நடத்துறோம், அரசியல் பேசதான் வேண்டும் என்று பதில் கூறினார். எனவே, தம்மை பேச அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், நீங்கள் கொடுத்த நேரத்துக்குள் முடித்து விடுவேன் என்றார். 

ஆனால் இதை ஏற்றுக் கொள்ள மறுத்த பேரவைத் தலைவர் அப்பாவு, வெளியே மேடையில் பேசுவது மாதிரி இங்கு பேசுவது நாகரீகமல்ல, அவைக்கு என ஒரு நாகரீகம் உள்ளது, அதன்படி தான் நடந்துகொள்ள வேண்டும் என்று கடிந்து கொண்டார். மூத்த அமைச்சர்கள் சப்ஜெக்ட்டை தாண்டாமல் பேசியதை மனதில் வைத்து பேசுங்கள் என்றும் அவர் அமைச்சரை அறிவுறுத்தினார். 

பேரைவைத் தலைவர் அப்பாவுவின் அடுத்தடுத்த கண்டிப்புகளால் அமைச்சர் மனோ தங்கராஜின் முகம் வாடிப்போனது. சொந்த கட்சியை சேர்ந்த அமைச்சரையே பேரவைத் தலைவர் அப்பாவு கடிந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. அமைச்சரின் பேச்சை கண்டித்ததோடு, அவைக் குறிப்பில் இருந்து நீக்கப் போவதாக பேரவைத் தலைவர் அபபாவு கூறியது ஆளுங் கட்சியினர் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் மாவட்டத்தை சேர்ந்த இருவருக்கும் இடையே உள்ள ஆதிக்க போட்டி, சட்டப் பேரவையிலும் எதிரொலித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Night
Day