திமுகவுக்கு ரூ.509 கோடி கொடுத்த மார்ட்டின்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனத்திடம் இருந்து, தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக 509 கோடி ரூபாய் நிதி பெற்றது அம்பலமாகி உள்ளது. 

அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் நடைமுறையை அண்மையில் ரத்து செய்த உச்சநீதிமன்றம், அதன் மூலம் பெறப்பட்ட நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி கடந்த செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது. தொடர்ந்து தேர்தல் பத்திர விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டது.

அந்த வகையில், இன்று வெளியான புதிய தகவலில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வாரி இறைத்தவர்களின் பட்டியலில் கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் "பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ்" நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, சுமார் ஆயிரத்து 368 கோடி ரூபாய் அளவுக்கு மார்ட்டினின் நிறுவனம் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளது. 

அதில், திமுக மட்டுமே சுமார் 509 கோடி ரூபாயை மார்ட்டினின் நிறுவனத்திடம் இருந்து நன்கொடையாக பெற்றுள்ளது. இதனை திமுக பொருளாளரும், எம்.பியுமான டி.ஆர்.பாலு கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டதும் தெரியவந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுகவுக்கு கிடைத்த 656 கோடி ரூபாயில் மார்ட்டினின் நிறுவனம் மட்டும் 509 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடை அளித்துள்ளது. மேலும், 11 நிறுவனங்களிடம் இருந்து திமுக தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் பத்திர விவரங்கள் தொடர்பான வழக்கு நாளை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

Night
Day