எழுத்தின் அளவு: அ+ அ- அ
முதலமைச்சர் ஸ்டாலினின் ஊழல் ஆட்சியால் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளதாக கடுமையாக விமர்சித்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தமிழர்களின் பண்பாட்டிற்கு எதிராக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அரியலூரில் நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழர்களின் கலாச்சாரத்தை திமுக அழித்து வருவதாகவும், மு.க.ஸ்டாலினின் ஊழல் ஆட்சியில், தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜக காத்து வருவதாகவும், ஆனால் திமுக, காங்கிரஸ் அதனை அழிக்க முயற்சி செய்து வருவதாகவும் ஜே.பி.நட்டா சாடினார். இந்தியா கூட்டணியில் உள்ள பாதி தலைவர்கள் ஜெயிலிலும், மீதி தலைவர்கள் பெயிலிலும் உள்ளதாக விமர்சித்த ஜே.பி.நட்டா, நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் உலகின் 3வது பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்றும் உறுதியளித்தார்.
இதனைதொடர்ந்து கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஹெலிபேடு தளத்தில் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கார் மூலம் சென்று கரூரில் தனியார் மகாலில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் திமுக கட்டப்பஞ்சாயத்தும், வாரிசு அரசியல் செய்யும் கட்சியாக உள்ளதாக குறிப்பிட்டார். அந்த வரிசையில் கெஜ்ரிவாலும், மணீஸ் சிசோடியாவும் ஊழல் செய்து சிறையில் உள்ளதாகவும், சனாதானத்தை இழிவாக பேசியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்றார்.
பின்னர் விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து ஜே.பி.நட்டா மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தமிழர்களின் பண்பாட்டிற்கு எதிராக இருப்பதாக சாடினார். இந்தியா கூட்டணியில் கருணாநிதி குடும்பம் தொடங்கி உத்தவ் தாக்கரே வரை குடும்ப ஆட்சி, குடும்ப கட்சியாக இருப்பதாகவும் ஜே.பி.நட்டா விமர்சனம் செய்தார்.