எழுத்தின் அளவு: அ+ அ- அ
தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டை முற்றுகையிட்ட மீனவர்கள்,
தருவைகுளம் பகுதியில் கடல் அரிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டை தருவைகுளத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தருவைகுளம் மீனவர் கிராமத்தில் ஏற்பட்டு வரும் கடல் அரிப்பு காரணமாக மீன்பிடித்தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், கடற்பகுதியில் இருந்த வலை பின்னும் கூடம் ஆகியவை கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு கடலுக்குள்ளே சென்று விட்டதாகவும், படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி படகுகளும் சேதமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் தருவைகுளம் மீனவ கிராமத்தை பாதுகாக்க தூண்டில் வலைவு அமைத்து தர கோரி கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேசிய அமைச்சர், உடனடியாக இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்றும், நிதி ஒதுக்கீட்டிற்கு பிறகே செயல்படுத்த முடியும் என தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மீனவர்கள் அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.