திமுக அரசை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி

எழுத்தின் அளவு: அ+ அ-

மீட்டர் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும், சென்னை எழும்பூரில் இருந்து கோட்டையை நோக்கி ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தாமல் கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக செயல்படும் திமுக அரசை கண்டித்தும், டூவீலர் பைக் டாக்ஸியை தடை செய்ய வலியுறுத்தியும் ஆட்டோ ஓட்டுநர்கள் எழும்பூரில் இருந்து கோட்டையை நோக்கி பேரணியாக சென்றனர். ஆனால் போலீசார், அவர்களை எழும்பூர் ரவுண்டானா வரை மட்டுமே செல்ல அனுமதி அளித்ததை அடுத்து, எழும்பூர் பழைய சித்ரா தியேட்டர் அருகில் இருந்து ரவுண்டானா வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் பேரணியாக சென்றனர். இதில், சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, எல்.எல்.எப்ஃ, உள்ளிட்ட 6 ஆட்டோ சங்கங்கங்களை சேர்ந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக திமுக அரசை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, புதிய ஆட்டோக்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மானியம் என்ற தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும், 11 ஆண்டுகளாக உயர்த்தாத மீட்டர் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு ஆட்டோ செயலியை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே போன்று ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் சங்கம் சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்றனர். அப்போது, போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கரின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்தும், 11 ஆண்டுகளாக உயர்த்தப்படாத ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்யவும் வலியுறுத்தினர். மேலும் ஒட்டு மொத்த தொழிலாளர்களுக்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் திமுக அரசு, 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் பதில் சொல்ல நேரிடும் என்றும் எச்சரித்தனர்.



Night
Day