எழுத்தின் அளவு: அ+ அ- அ
தேர்தல் வாக்குறுதி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விளம்பர திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 24 மையங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் சிஐடியூவினர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் சிஐடியூவினர், சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பியதுடன், இந்த போராட்டத்தில் அரசு செவி சாய்க்கவில்லை எனில் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு போக்குவரத்து ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதேபோல் திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகே அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் சிஐடியுவினர் சார்பில் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், போராட்டத்தை கண்டுகொள்ளாத விளம்பர அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததை இதுவரை அமல்படுத்தாத திமுக அரசை கண்டித்து திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே சிஐடியூவினர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் இடையே திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து கோவை மற்றும் பழனிக்கு புறப்பட்ட அரசுப் பேருந்துகளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் காந்திபுரம் அருகேயுள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு மாவட்ட CITUவினர் 100க்கும் மேற்பட்டோர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்னைத்தொடந்து சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியூவினர், திமுக அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பிய நிலையில், சிலரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை சந்திப்பில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து 350க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்களை கைது செய்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் போராட்டம் குறித்து பேட்டியளிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைது செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.