திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவேன் - புரட்சித்தாய் சின்னம்மா சூளுரை

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்‍குறிச்சியில் 65 மனித உயிர்களைப் பலி கொண்ட கள்ளச்சாராய சம்பவத்திற்கு திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையும், அலட்சியப்போக்‍கும்தான் காரணம் என, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார். சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, சுகாதாரம், விவசாயம், போக்‍குவரத்து, பொது விநியோகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும் சின்னம்மா புகார் தெரிவித்தார். இதற்கெல்லாம் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நல்ல முடிவு ஏற்படும் என்றும், விரைவில் தான் மேற்கொள்ளவிருக்‍கும் சுற்றுப்பயணம் இதன் தொடக்‍கமாக அமையும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை போயஸ் கார்டனில் உள்ள 'ஜெயலலிதா இல்லத்தில்' செய்தியாளர்களுக்‍குப் பேட்டி அளித்தார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்‍கும், தான் நேரில் வரவேண்டும் என கழகத் தொண்டர்கள் விரும்புவதாகவும், அதன்பேரில் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.

புரட்சித்தலைவி அம்மாவின் படத்தைக்‍ காட்டி, பல்வேறு கட்சிகளும் தேர்தலில் வாக்‍கு சேகரிப்பதாக, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு புரட்சித்தாய் சின்னம்மா பதிலளித்தார்.

கள்ளக்‍குறிச்சியில் 65 உயிர்களைப் பலி கொண்ட கள்ளச்சாராய சம்பவம் போன்று, புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்‍காலத்தில் எந்தவொரு சம்பவமும் நிகழ்ந்ததில்லை என்றும், காவல்துறை அம்மாவின் முழுக்‍ கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டார். திமுக ஆட்சியில் காவல்துறையை இயக்குவோரின் செயல்பாடு சரியில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

கள்ளக்‍குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து திமுக அமைச்சர் துரைமுருகன், சர்ச்சைக்‍குரிய கருத்துகளை வெளியிட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, பொறுப்புமிக்‍க இடத்தில் இருக்‍கின்ற மூத்த அமைச்சர் இப்படி எல்லாம் பேசக்‍கூடாது என, புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் முறையாக வழங்கப்படவில்லை எனவும், இதனால் பொதுமக்‍கள் மிகுந்த அவதிக்‍கு ஆளாகி இருப்பதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.

தமிழகத்தின் பல இடங்களில் சுகாதார சீர்கேடுகள் நிகழ்வதாகவும், சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்தத் தொகுதியிலேயே குடிநீரில் கழிவுநீர் கலந்ததால், அதனைப் பருகிய ஒரு சிறுவன் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்த புரட்சித்தாய் சின்னம்மா, இதுபோன்ற, முக்‍கியமான மக்‍கள் பிரச்சனைகளில் திமுக அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என குற்றம் சாட்டினார்.

கோடநாடு வழக்‍கு விரைவில் முடியும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருப்பது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று என கேள்வி ஒன்றுக்‍கு பதிலளித்தபோது புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டார்.

புதிய விமான நிலையம் பற்றிய திமுக அரசின் அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, திமுகவுக்‍கு வேண்டியவர்கள் பலர் அப்பகுதியில் நிலங்கள் வாங்கி இருப்பதால், அவர்களுக்‍கு பயனுள்ளதாக இருக்‍கும் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.

மத்தியில் ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் மருத்துவப் படிப்புக்‍கான 'நீட்' தேர்வு கொண்டுவரப்பட்டதாகவும், அப்போது காங்கிரஸ் கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த திமுக, அதற்கு முக்‍கிய காரணம் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார். அன்று, நீட் தேர்வை ஆதரித்துவிட்டு, தற்போது நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்‍கு அளிக்‍கப்பட வேண்டும் என திமுகவினர் பகல் வேடம் போடுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டினார்.

புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்‍காலத்தில், போக்‍குவரத்துக்‍ கழகங்களுக்‍கு பெருமளவில் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டதாகவும், திமுக ஆட்சியில் பழைய பேருந்துகளே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் கொண்டுவருவதாக தெரிவித்த திமுக அரசு, விவசாயத் துறை முன்னேற்றத்திற்கும், விவசாயிகளின் நல்வாழ்விற்கும் எதையும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார். ஆவின் பால் விநியோகம் சரியில்லை என்றும் பெருமளவில் குளறுபடிகள் நடப்பதாகவும் குறிப்பிட்ட புரட்சித்தாய் சின்னம்மா, திமுக ஆட்சியில் வெறும் விளம்பரங்கள்தான் இருக்‍கிறதே தவிர நிர்வாகத் திறமையோ, முறையான செயல்பாடோ இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.


Night
Day