திமுக உட்கட்சி பூசலால் சர்ச்சை... அதிகாரிகளை மிரள விட்ட அமைச்சர் ரகுபதி

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக அமைச்சர்கள் ரகுபதிக்கும், மெய்யநாதனுக்கும் இடையே உட்கட்சி பூசல் இருந்து வருவது தற்போது அம்பலமாகியுள்ளது. அடிக்கல் நாட்டுவிழாவில் நிகழ்ந்த சலசலப்பு சம்பவங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் நுழைவு வாயில் அருகே அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 

இதற்காக காலை 10.45 மணிக்கே வருகை தந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், காணொலி வாயிலாக முதல்வர் அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து, அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, அறநிலையத்துறை அதிகாரிகளுடன் இணைந்து அடிக்கல் நாட்டி விட்டு உடனடியாக அங்கிருந்து சென்றார்.

அவர் சென்ற அடுத்த நொடியே அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வருகை புரிந்தார். அப்போது ஏற்கனவே  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டி விட்டு சென்றதை கண்டு ஆவேசமடைந்தார்.

தலைக்கேறிய கோபத்தால், அங்கிருந்த அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் நான் வருவதற்குள் எதற்காக அவசரம் அவசரமாக அடிக்கல் நாட்டினீர்கள், ஏன் இந்த விழாவிற்கு தன்னை அழைத்தீர்கள், முதல்வர் அடிக்கல் நாட்டுவதற்கு முன்பே இங்கு அடிக்கல் நாட்டுவதா என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இந்த சம்பவம் நடைபெற்றதை செய்தியாளர்கள் செய்தி சேகரித்த பொழுது, அவர்களை செய்தி சேகரிக்க கூடாது என்றும், இதே போல் தொடர்ந்து செய்திகள் எடுத்துக் கொண்டிருந்தால் நாங்கள் எப்போது தான் பேசுவது, ஏன் தாங்கள் பேசுவதை எல்லாம் எடுத்து செய்தியாக ஒளிபரப்பு செய்கிறீர்கள் என்று ஒருமையில் அமைச்சர் வசைப்பாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவிடம், அறநிலையத்துறை இணை ஆணையருக்கு இதுகுறித்து விளக்க நோட்டீஸ் அனுப்புங்கள், நானும் அறநிலைத்துறை அமைச்சரிடம் பேசிக் கொள்கிறேன் என்று தெரிவித்துவிட்டு ஆவேசமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

திமுகவில் நடைபெறும் உட்கட்சி பூசலால், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிக்கிக் கொண்டு செய்வது அரியாது திகைத்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

பல்வேறு மாவட்டங்களில் திமுகவினரிடையே நிலவும் உட்கட்சி பூசலால், அதிகாரிகளின் பாடு திண்டாட்டமாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.

Night
Day