திமுக எம்எல்ஏ காருக்கு மட்டும் மரியாதை... கண்டுகொள்ளாத பறக்கும் படை...

எழுத்தின் அளவு: அ+ அ-

சங்கரன்கோவில் அருகே, வாகன சோதனையின்போது திமுக எம்எல்ஏ-வின் வாகனத்தை  தேர்தல் பறக்கும் படையினர் கண்டுகொள்ளாமல் வழியனுப்பி வைத்துள்ளனர். பொது மக்களை முகம் சுளிக்க வைத்த அதிகாரிகளின் இந்த பாரபட்ச நடவடிக்கை குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

தமிழகத்தில் அடுத்த மாதம் 17ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். 

தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் வாகன சோதனையின் ஒருபகுதியாக, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடியை அடுத்த டி என் புதுக்குடி பகுதியில், சங்கரன்கோவில் பிடிஓ ராதா தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த விழியாக வந்த கார்கள் மட்டுமின்றி அரசுப் பேருந்துகளையும் கூட விட்டு வைக்காமல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் சங்கரன்கோவில் எம்எல்ஏ-வுமான ராஜா, கட்சிக் கொடி பறந்த சொகுசு காரில் அந்த வழியாக வந்தார்.

சாலைகளில் சாதாரண மனிதர்களின் கார்களைப் பார்த்தவுடன் ஓடோடிச் சென்று வழிமறித்து மணிக் கணக்கில் சல்லடை சல்லைடையாக சோதனையிட்ட பறக்கும் படையினர், எம்எல்ஏ காரைப் பார்த்ததும், புன்னகைத்தபடி வணக்கம் வைத்து அவரை வரவேற்றனர். அடுத்த சில நொடிகளில் என்ன நடந்ததோ தெரியவில்லை, எந்த சோதனையும் நடத்தப்படாமல் எம்எல்ஏவின் கார் அங்கிருந்து பத்திரமாக வழியனுப்பி வைக்கப்பட்டது. 

பறக்கும் படையினரின் இந்த நடவடிக்கை அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்ததோடு முகம் சுளிக்கவும் வைத்தது. இந்த சம்பவத்தைப் பார்த்தவர்கள், சாமானியர்களுக்கு ஒரு சட்டம், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சட்டமா என்று கேள்வி எழுப்பினர். இந்த சம்பவத்தில் கடமையை மறந்து செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சமூக ஆர்வலர்கள், அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படாமல் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day