திமுக விளம்பர அரசுக்கு புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை வழங்க, கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டியே தீருவோம் என சொல்லி வருவதாகவும், முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்ட கேரள அரசு திட்டமிடுவதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். இவற்றையெல்லாம் உறுதியோடு தடுக்க வேண்டிய திமுக அரசு, கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாகவும், தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் பறிபோவதைப்பற்றி எந்தவித கவலையும் இல்லாமல், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் திமுக விளம்பர அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்‍கையில், 

"நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
 வான்இன்று அமையாது ஒழுக்கு"

என்ற வள்ளுவரின் பொன் மொழிகள் எல்லோருக்கும் உரித்தானதுதான் என, அண்டை மாநிலமான கர்நாடக, ஆந்திர, கேரள அரசுகள்  எண்ணிப்பார்க்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். கர்நாடக அரசோ தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை வழங்க மறுக்கிறது - ஆந்திர அரசோ பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டியே தீருவோம் என சொல்லி வருகிறது - கேரள அரசோ முல்லை பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்ட திட்டமிடுகிறது - இவற்றையெல்லாம் உறுதியோடு தடுக்க வேண்டிய திமுக தலைமையிலான அரசோ, கண்ணை மூடிக்கொண்டு  இருக்கிறது - தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் பறிபோவதைப்பற்றி எந்தவித கவலையும் இல்லாமல், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக, புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 31 வது கூட்டம் டெல்லியில் கடந்த 25ம் தேதி நடைபெற்றது - இதில் கலந்து கொண்ட கர்நாடக அரசு, ஜூன் மாதத்தில் தரவேண்டிய நிலுவை நீர் 5 புள்ளி மூன்று ஆறு ஏழு டிஎம்சியையும், ஜூலை மாதத்திற்கு தரவேண்டிய 31 புள்ளி இரண்டு நான்கு டிஎம்சி தண்ணீரையும் தமிழகத்திற்கு திறந்து விட மறுத்து விட்டதாக செய்திகள் வருகின்றன - கர்நாடக அரசு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக மக்களுக்கு தரவேண்டிய, உரிய காவிரி நீரை உரிய காலத்தில் தருவதில் ஒவ்வொரு ஆண்டும் பிரச்சனை செய்து வருகிறது - கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 40 டிஎம்சி தண்ணீர் இன்னும் கர்நாடகா தர வேண்டி பாக்கி உள்ளதாக தெரியவருகிறது - கர்நாடகாவில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்படும் காலங்களில் மட்டும் உபரி நீரை திறந்து விடுகிறது - இதுபோன்று மழைக்காலங்களில் கர்நாடகாவால் திறந்துவிடப்படும் உபரி நீரால் தமிழக விவசாயிகளுக்கு எந்தவித பயனும் இல்லை - தங்களது கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசிடம் காவிரி நீரை கேட்டுப் பெற திராணியற்ற அரசாக திமுக தலைமையிலான அரசு இருந்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது என, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

புரட்சித்தலைவி அம்மாவின் தொடர் முயற்சியால், தமிழகத்துக்கு ஆண்டுக்கு, 205 டி.எம்.சி நீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம் இடைக்காலத் தீர்ப்பு ஒன்றை வழங்கியது - அதன்படி தமிழகத்திற்கு நீரை பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் புரட்சித்தலைவி அம்மா மேற்கொண்டார் - காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் ஒன்பதாவது அட்டவணையில் வெளியிடச் செய்தார் - மேலும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி நீரை பெறுவதற்காக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார் - அதனைத்தொடர்ந்து பல்வேறு சட்ட போராட்டங்களை முன்னெடுத்து காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத் தர வேண்டும் என தனது இறுதிமூச்சு உள்ள வரை தொடர்ந்து போராடினார் - கடந்த 2016ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா தனது உடல்நிலை சரியில்லாமல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் கூட, தமிழக அரசு அதிகாரிகளை மருத்துவமனைக்கே நேரில் வரவழைத்து காவிரி நதி நீரை பெறுவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார் - புரட்சித்தலைவி அம்மா தொடர்ந்து மேற்கொண்ட நீண்டகால சட்ட போராட்டத்தின் பயனாக, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்க வேண்டும் எனவும், தமிழகத்திற்கு ஆண்டொன்றுக்கு 177 புள்ளி இரண்டு ஐந்து டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் எனவும் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது - இத்தகைய சூழலில் கர்நாடக அரசு எந்தவித கட்டுப்பாடுமின்றி தன்னிச்சையாக செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது என, புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், புதிதாக அமைந்துள்ள ஆந்திர அரசும் தன் பங்கிற்கு, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என அறிவித்து இருப்பது தமிழக விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது - ஏற்கெனவே, பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன - இந்நிலையில் மேலும் ஒரு தடுப்பணை கட்டப்பட்டால் வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என, கழகப் பொதுச் செயலாளர் ​புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.  

மேலும், கேரள அரசு ஏற்கனவே முல்லைப்பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்ட பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்துவருகிறது -அதேபோன்று அமராவதி அணைக்கு வரும் நீரை தடுத்திடும் வகையில் சிலந்தி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்றை கேரள அரசு எந்தவித அனுமதியும் பெறாமல் கட்டிவருகிறது - இவ்வாறு ஒரு அண்டை மாநிலம் புதியதாக தடுப்பணை கட்டுவது பற்றி இங்குள்ள திமுக தலைமையிலான ஆட்சியாளர்களுக்கு தெரிந்திருந்தும், கண்டும் காணாமல் இருக்கிறார்கள் - திமுக தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியினரே கேரள மாநில ஆட்சியாளர்கள் என்பதால் அவர்களை எதிர்க்க துணிவில்லாமல், நடப்பவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டுள்ளது - 

இவ்வாறு அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கான ஜீவாதார உரிமைகளை பறித்தால், தமிழகம் பாலைவனமாக மாறிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை - ஆற்றின் கரை ஓரங்களில்தான் அன்றைய நாகரீகங்கள் வளர்ந்தன - ஆற்று நீர்தான் தங்களின் ஜீவாதாரமாக கருதி தங்களின் வாழ்விடங்களை மனிதன் அமைத்துக் கொண்டான் என வரலாறுகள் சொல்கின்றன - நதிக்கு தெரியாது எந்த மாநிலம், எந்த மக்கள் என்று - ஆளும் வர்க்கத்தினர்தான் தங்களது அரசியல் வாழ்க்கைக்காக மக்களை வேறுபடுத்தி ஏழை எளிய விவசாய பெருங்குடி மக்களை வஞ்சிக்கின்றனர் - அந்நிய சக்திகள்தான் நம்மை வஞ்சிக்க நினைக்கிறார்கள் என்றால், உள்நாட்டிலேயே இயற்கை கொடுக்கும் நீரை பகிர்ந்து கொள்வதில் பாரபட்சம் பார்க்கப்படுவது மிகவும் வேதனையாக உள்ளது - தமிழகத்தை வஞ்சிக்க துடிக்கும் அண்டை மாநிலங்களில் கர்நாடக அரசும், கேரளா அரசும் திமுகவினரின் கூட்டணியில் அங்கம் வகிப்பவர்கள் - அவர்களுடன் சுமுகமாக பேசி தமிழக மக்களையும் விவசாயிகளையும் காக்க திமுக அரசு எந்த முயற்சியும் எடுக்காதது தமிழக மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்புகிறது - தமிழக விவசாயிகள் அழிந்தாலும் பரவாயில்லை தங்கள் கூட்டணிக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது என்று திமுக ஆட்சியாளர்கள் எந்த முயற்சியையும் எடுக்காமல் கண்ணை மூடிக்கொண்டு இருப்பது எந்தவிதத்தில் நியாயம்? என்று புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்டை மாநிலங்கள் நம்மை தண்ணீருக்காக மிரட்டுவது தமிழனின் வரலாற்றை கேலிக்கூத்தாக்குவது போல் உள்ளது - அண்டை மாநில அரசுகளிடமிருந்து, விவசாயத் தொழிலை செய்யும் தமிழக மக்களுக்கு தண்ணீரை பெற்றுத்தர முடியாத இந்த வக்கற்ற அரசுதான், வெளிநாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை ஈர்ப்பதாக நாடகங்களை அரங்கேற்றியும் பார்க்கின்றன என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான அரசின் நிர்வாக திறமையின்மையால், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் இன்று கருணாபுரம் என்ற பகுதியே கண்ணீர் கடலில் மூழ்கி விட்டது - தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது - தமிழக மக்கள் நிம்மதியை மறந்து வெகு நாட்கள் ஆகின்றது - என்றைக்கு திமுக ஆட்சி பொறுப்பேற்றதோ, அன்று முதல் இன்று வரை தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வாட்டி வதைக்கப்படுகின்றனர் - உண்மைநிலை இவ்வாறு இருக்கும் போது, கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் மேடை தோறும் திமுகவினர் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என ஒரு வடிகட்டிய பொய்யை பேசி வருகின்றனர் - எனவே, பொய் மூட்டைகளின் பிறப்பிடமான இந்த செயலற்ற திமுக தலைமையிலான அரசு தமிழக மக்களையும், விவசாய பெருங்குடி மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் பறிபோவதை விரைவில் தடுத்து நிறுத்த வேண்டும் - தமிழகத்திற்கு சேர வேண்டிய காவிரி நீரை கர்நாடக மாநிலத்திடமிருந்து முறையாக பெற்றுத்தர தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசை கேட்டுக்கொள்வதாக, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day