எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாகன பேரணி நடத்தினர். தி.நகர் முதல் தேனாம்பேட்டை வரை நீடித்த வாகன பேரணியின் போது தொண்டர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னைக்கு வருகை புரிந்தார். மாலை 6.05 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைதொடர்ந்து தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி, சட்டை அணிந்து வந்த பிரதமர் மோடிக்கு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருமருங்கிலும் தொண்டர்கள் ஆரவாரத்துடன் கை அசைத்து மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து சாலை மார்க்கமாக தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட தியாகராய நகர் பனகல் பார்க் பகுதிக்கு வந்தடைந்த அவர் அங்கிருந்து பாண்டிபஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை வாகனப் பேரணியாகச் சென்று பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவு திரட்டினார்.
பிரதமரின் வாகன பேரணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னையில் மூன்று தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களான தமிழிசை சௌந்திரராஜன், வினோஜ் செல்வம், பால்கனகராஜ் ஆகிய வேட்பாளர்கள் இருந்தனர்.
தேனாம்பேட்டையில் வாகன பேரணி நிறைவு பின், அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். இன்று காலை 9.15 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் புறப்படுகிறார். அதனைத்தொடர்ந்து காலை 10.15 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான வேலூர் கோட்டை மைதானத்திற்குச் செல்கிறார்.