திருச்சியில் உச்சி வெயிலின் உக்கிரம்... ஆதரவற்றோர் பாதங்களுக்கு ஓய்வு தரும் பள்ளி மாணவி...

எழுத்தின் அளவு: அ+ அ-

உச்சி வெயிலின் உக்கிரத்தில் ஓய்ந்திருக்கும் ஆதரவற்றோர்களுக்கு காலணிகள் வழங்கி உதவிய பள்ளி மாணவியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக சேவைக்காக கிடைத்த விருது பணமான ஒரு லட்ச ரூபாயை வைத்து காலணிகளை வழங்கி வரும் மாணவியின் ஈகை பண்பு குறித்து சற்று விரிவாக காணலாம்...

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. திருச்சியில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. உச்சபட்சமாக 105 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருவதால், திருச்சிவாசிகள் வீடுகளை வீட்டு வெளியே நடமாட முடியாத நிலை உள்ளது. 

கோடை வெயிலால் வீடுகளில் தஞ்சம் அடைந்தவர்கள் பலர் இருந்தாலும், ஆதரவற்றோர், உழைக்கும் தொழிலாளர்களின் ஓய்ந்து போன கால்கள் ஓய்வெடுக்க சாலையோர நிழல்களில் இடம் தேடிக் கொண்டிருக்க, உச்சிவெயிலில் ஓய்வெடுக்கும் கால்களுக்கு காலணிகளை அளித்துள்ளார் 10வகுப்பு பள்ளி மாணவி சுகித்தா.

திருச்சி சுப்ரமணியபுரத்தில் வசிக்கும் மோகன் - பிரபா தம்பதியரின் மகள் சுகித்தா 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவர் திருச்சியில் சுட்டெரிக்கும் வெயிலில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற 100க்கும் மேற்பட்டோர்களுக்கு தனது சகோதரர் சுஜித் உடன் இணைந்து தனது சேமிப்பில் இருந்து காலணிகளை வாங்கி கொடுத்தது பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

கடந்த 5 வருடங்களாக சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு குளிர்காலத்தில் போர்வை, மழை காலங்களில் குடை, வெயில் காலங்களில் காலணிகள் மற்றும் விசிறி எனவும் தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் வருடம் தோறும் புத்தாடை, துண்டு, இனிப்பு, காரம், மற்றும் 100 ரூபாய் கொடுத்து தனது மகிழ்ச்சியை ஆதரவற்றோருடன் பகிர்ந்து வருவதாக கூறுகிறார் மாணவி சுகித்தா.

இவரது சமூக சேவையை பாராட்டி பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான மாநில அரசின் விருதும், 1 லட்சம் காசோலையும் தமிழக அரசு வழங்கியதாகவும், அந்த விருது தொகையை வைத்து ஆதரவற்றோர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருவதாகவும் மாணவி சுகித்தா நெகிழ்ச்சி தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட ஸ்ரீரங்கம், மாம்பழசாலை, சத்திரம் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் கூலிவேலை செய்யும் மக்கள் பயணுரும் வகையில், காலணிகளை வழங்கி உச்சி வெயிலின் உக்கிரத்திலிருந்து பாதங்களுக்கு ஓய்வு தந்து உதவியுள்ளார் பள்ளி மாணவி சுகித்தா. 

Night
Day