எழுத்தின் அளவு: அ+ அ- அ
காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், விளம்பர திமுக அரசை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வருவாய்த் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், பணி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் வருவாய்த்துறை அனைத்து நிலை ஊழியர்களும் இரவிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரம் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையாக நிதி ஒதுக்கீட்டினை செய்வது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறையினர், 3-ம் கட்ட போராட்டமாக இரவிலும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தப் போராட்டத்தால், பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் பணிக்கு முன்பணம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் தேதி அறிவித்தாலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை பணிகளை புறக்கணிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இரவு நேரத்திலும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.