எழுத்தின் அளவு: அ+ அ- அ
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உலக புகழ்பெற்ற கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அதிகாலையில் இருந்தே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் புகழ்பெற்ற கந்த சஷ்டி திருவிழா கடந்த 12-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்வின் 6-ஆம் நாளான இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாரதனையும் உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சுவாமி ஜெயந்திநாதர் சூரனை வதம் செய்யும் சூரரம் இன்று மாலை 4.30 மணிளவில் கடற்கரையில் நடக்க உள்ளது. இதனையொட்டி, அதிகாலையில் இருந்தே பக்தர்கள் திருச்செந்தூருக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும், கடலில் புனித நீராடி சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
7வது நாளான நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாரனையும் உதய மார்த்தாண்ட அபிஷேகமும் மற்றும் கால பூஜைகளும் தொடர்ந்து நடக்க உள்ளது. பின்னர்,மாலையில் சாமிக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.