திருப்பதி லட்டு தயாரிக்க அனுப்பப்பட்ட நெய்யில் எந்த குறைபாடும் இல்லை - ஏ.ஆர். டெய்ரி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி லட்டில் மாமிச கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த கோரி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஆந்திராவில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் புனிதமிக்க திருமலை திருப்பதி கோயில் லட்டுகள் தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டதாக தெரிவித்தார். குறிப்பாக, லட்டு தயாரிக்க விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறிய குற்றச்சாட்டு ஆந்திர அரசியலில் பரபரப்பையும், பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட லட்டுவின் ஆய்வக அறிக்கையை, தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வெங்கட ரமணா ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டார். ஆய்வறிக்கையில், மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவை திருப்பதி லட்டு தயாரிப்பில் இருந்தது தெரிய வந்துள்ளதாக அவர் கூறினார். லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்களின் மாதிரிகள் குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய சி.ஏ.எல்.எப் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் திருப்பதி லட்டு குறித்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி, பதவியில் இருக்கும் நீதிபதி அல்லது உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்படும் சிறப்பு குழு இது குறித்து விசாரணை நடத்தக் கோரி, ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு வரும் 25-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனிடையே திருப்பதி கோவில் லட்டில் மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு மற்றும் மாட்டிறைச்சிக் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில், கடும் நடவடிக்கை எடுக்க அரசு உறுதி பூண்டுள்ளதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கூறியுள்ளார். இந்த விஷயம் அனைவரையும் கவலை அடைய செய்திருப்பதாக தெரிவித்துள்ள அவர், இது கோவில்களை இழிவுபடுத்துவது, அதன் நிலப் பிரச்சினைகள் மற்றும் பிற தர்ம நடைமுறைகளைச் சுற்றியுள்ள பல சிக்கல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக கூறியுள்ளார். முந்தைய ஜெகன் மோகன் அரசால் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் இது தொடர்பான பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் பவன் கல்யாண் வலியறுத்தினார். கோவில்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் ஆராய தேசிய அளவில் சனாதன தர்ம பாதுகாப்பு வாரியம்’ அமைப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Night
Day