திருப்பூரில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஓம் சக்தி கோவில் அருகில், கொங்கு மெயின் ரோடு, அரிஜன காலனி, பிரிட்ஜ்வே காலனி உள்ளிட்ட இடங்களில் மழை நீர் சாக்கடை நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்த பகுதியில் மழை நீர் செல்வதற்கு வடிகால் வசதி ஏற்படுத்தாததாலும், சாக்கடை கால்வாய் தூர் வாராததாலும் குப்பைகள் அடைத்து இது போன்று சாக்கடை கழிவு நீர் வீடுகளுக்குள் புகுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நீருடன் விஷ பூச்சிகளும் வீட்டிற்குள் வருவதால், அச்சமுடன் வசிக்கும் நிலை இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மழை நீர் புகுந்ததால், வீட்டிற்குள் இருந்த பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தகவலறிந்த மாநகராட்சி ஊழியர்கள் தேங்கி உள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். பெருமாநல்லூர் அருகே காளிபாளையம் பகுதியில் மழை நீர் சாலையில் தேங்கி நிற்பதால் இருசக்கர மற்றும் கனரக வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.