எழுத்தின் அளவு: அ+ அ- அ
விசைத்தறியாளர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக கோவை மற்றும் திருப்பூர் புறநகரப் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த கடையடைப்பு போராட்டம் காரணமாக கோவை புறநகர் பகுதிகளில் உள்ள சாலைகள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வுக்கு ஏற்ப புதிய கூலி உயர்வு கோரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கடந்த மார்ச் 19 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில், கோவை கருமத்தம்பட்டியில் கடந்த 11 ஆம் தேதி முதல் முதல் இன்று வரை 5 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை விசைத்தறியாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் விசைத்தறியாளர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக, கோவை மற்றும் திருப்பூர் புறநகர் பகுதிகளான சோமனூர், காரணம்பேட்டை, கருமத்தம்பட்டி, தெக்கலூர், அவிநாசி, கண்ணம்பாளையம், பெருமாநல்லூர் ஆகிய பகுதிகளில் வியாபாரிகள் சங்கங்கள் அழைப்பின் பேரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த கடையடைப்பு போராட்டம் காரணமாக கோவை புறநகர் பகுதிகளில் உள்ள சாலைகள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் விசைத் தறி உரிமையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கழிவு பஞ்சுகளின் விலையை கட்டுப்படுத்த கோரியும், சோலார் நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய கோரியும், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மின்சார வாரியம் அமல்படுத்த கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளான கரடிவாவி, காரணம்பேட்டை, சாமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் ஓபன் எண்ட் மில்கள் மூடப்பட்டுள்ளன. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 600க்கும் மேற்பட்ட ஒபன் எண்ட் மில்கள் மூடப்பட்டுள்ளதால் 32 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.