திருவண்ணாமலை மண் சரிவு விவகாரம் - மத்திய குழு ஆய்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த நிலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை 3 பேர் அடங்கிய மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் மண் சரிவு குறித்து கேட்டறிந்தனர்.

திருவண்ணாமலை நகரில் உள்ள வஉசி நகர் 11வது தெருவில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த நிலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை 3 பேர் அடங்கிய மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். பொன்னுசாமி ஒன்றிய வேளாண்மை துறை இயக்குனர் தலைமையில் ஜல் சக்தி அபியான் இயக்குனர் ஆர். சரவணன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர்  கே.எம்.பாலாஜி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். விபத்து ஏற்பட்ட இடத்தினுடைய சூழல், விபத்து நடைபெற்றது குறித்து பொதுமக்களிடம் விரிவாக கேட்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து பொதுமக்களை சந்தித்த அவர்கள் நிவாரணம் முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்றும் ஏதேனும் தேவைப்படுகிறதா என கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து பேசிய மத்திய ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர் பாலாஜி, விபத்து நடந்த இடத்தை விரிவாக பார்வையிட்டதாகவும் அனைத்து தகவல்களும் அறிக்கைகளாக அரசிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

இதனிடையே தீபமலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை மத்திய குழுவினர் தற்போது ஆய்வு செய்த நிலையில் விரைவில் அவர்கள் அரசுக்கு அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர். மேலும் முதற்கட்டமாக இங்குள்ள 20 நபர்களுக்கு தமிழக அரசின் சார்பில் தற்காலிக வீடு அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விருப்பம் உள்ளவர்கள் மனு அளித்தால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Night
Day