எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற பிரசார கூட்டத்தால் ஐந்து மணி நேரத்துக்கு மேலாக திருவண்ணாமலை-திண்டிவனம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை அடுத்த சோ.காட்டுக்குளம் கிராமம் அருகே திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அமைச்சர் எ.வ.வேலுவின் ஏற்பாட்டின் பேரில் திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதியிலிருந்து ஏராளமானோரை பணம் கொடுத்து ஆடுமாடுகளைப் போல் வாகனங்களில் ஏற்றி திமுகவினர் அழைத்து வந்தனர். இதனால், திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் செல்லும் சாலை முழுவதுமாக துண்டிக்கப்பட்டு வேட்டவலம் சாலையிலும், அவலூர்பேட்டை செல்லும் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 5 மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கி தவித்தது.
இது ஒருபுறம் இருக்க தேர்தல் விதிமுறைகளை மீறி மாநகராட்சியின் தற்காலிக கழிப்பறை வாகனங்கள் கொண்டுவரப்பட்டு திமுகவினர் பயன்படுத்தியது விமர்சனங்களை குவித்து வருகிறது. மேலும், திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை மேடையில் அமர வைக்காதததும் பேசுபொருளாகி உள்ளது.
இதேபோல, திருப்பூர் ராயபுரம் பகுதியில் இந்தியா கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில், பணம் கொடுப்பதற்காக விசிட்டிங் கார்டு டோக்கன் வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியினர் கொடுத்த இந்த டோக்கனை நம்பி கூட்டத்திற்கு வந்த பெண்கள், கடைசி வரை வெறும் டோக்கனை மட்டும் கையில் வைத்துக்கொண்டு பணம் கிடைக்காமல் திண்டாடினர். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பெண்கள் பணம் கிடைக்காத விரக்தியில் கோபத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.